சட்ட விரோத பணப்பரிமாற்ற புகார் தொழிலதிபர்கள் வீடுகளில் ஈடி ரெய்டு: புதுக்கோட்டையில் பரபரப்பு

புதுக்கோட்டை: சட்ட விரோத பணிபரிமாற்ற புகார் எதிரொலியாக 4 தொழிலதிபர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையால் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா மணமடை காலனியை சேர்ந்தவர் திருக்குமரன்(46). தொழிலதிபரான இவர், அதிராம்பட்டினத்தில் இறால் பண்ணை வைத்துள்ளார். கறம்பக்குடியில் வெல்டிங் பட்டறையும் நடத்தி வருகிறார்.

இவரது வீட்டுக்கு நேற்று காலை 7.30 மணிக்கு சென்னையிலிருந்து 2 கார்களில் 2 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர் வந்தனர். வீட்டுக்குள் சென்ற அவர்கள், கதவு மற்றும் ஜன்னல்களை உள்பக்கமாக அடைத்து விட்டு அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனை 10.30 மணி வரை நடந்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இறால் பண்ணை, வெல்டிங் பட்டறையிலும் சுமார் 2.30 மணி நேரம் சோதனை நடந்தது.

இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தை சேர்ந்தவர் சுல்தான் பயாஸ் (31). தொழிலதிபரான இவர், திருச்சி மற்றும் சென்னையில் ஏர் டிராவல்ஸ் ஏஜென்சி வைத்துள்ளார். இவரது வீட்டுக்கு நேற்று அதிகாலை 6.30 மணி அளவில் 2 கார்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4பேர் வந்தனர். வீட்டுக்குள் சென்று அவர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதே போல் இவரது உறவினரும், பங்குதாரருமான ஜெகதாப்பட்டினத்தில் உள்ள அன்வர்அலி (31) என்பவரது வீட்டிலும் காலை 7.30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பெருங்களூரில் செக்கு எண்ணெய் மில் வைத்துள்ள கந்தர்வகோட்டை பொக்கிஷகாரன்பட்டியை சேர்ந்த பாக்கியராஜ் (33) என்பவரது வீட்டுக்கு காலை 7.30 மணிக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சட்டவிரோத பண பரிமாற்ற புகார் தொடர்பாக இந்த 4 இடங்களிலும் சோதனை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சோதனை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: