சென்னிமலை: சென்னிமலை அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டாத ரூ.8.79 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூர் எல்லைமேடு அம்மன் நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (29). இவர் பழைய இரும்பு வியாபாரம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 6 வருடங்களாக அரசுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இவரிடம் ஜிஎஸ்டி கணக்கு குறித்து விசாரிப்பதற்காக நேற்று முன்தினம் மாலையில் கோவையில் இருந்து ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு இணை இயக்குனர் அஸ்வத் பாஜி தலைமையில் அதிகாரிகள் செல்வகுமாரின் பழைய இரும்பு குடோனுக்கு வந்தனர். அங்கு குடோனுக்குள் இருந்த அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது ரூ.15 லட்சம் பணம் இருந்துள்ளது. மேலும் குடோனுக்கு அருகிலேயே செல்வகுமார் வசிக்கும் சிமென்ட் ஷீட் போட வீடும் உள்ளது. இந்த வீட்டிலும் சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அப்போது செல்வகுமார் தனக்கு உடல்நிலை சரியில்லை என ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதனால் செல்வகுமார் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை எனக்கூறி ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் வீட்டின் பூட்டை உடைத்து சோதனை நடத்தினார்கள். அப்போது பீரோவுக்குள் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. இதனால் ஈரோடு வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருமான வரித்துறை உதவி இயக்குனர் பிரின்ஸ் ராஜ் தலைமையில் அதிகாரிகள் வந்து சோதனையில் ஈடுபட்டனர்.
விடிய விடிய செல்வகுமார் வீட்டில் சோதனை நடத்தி வீட்டில் இருந்த பணம் முழுவதையும் பறிமுதல் செய்தனர். பின்னர் பணம் எண்ணும் மிஷின் கொண்டு வந்து நேற்று மதியம் வரை பணத்தை எண்ணி பார்த்தபோது வீடு மற்றும் அலுவலகத்தில் கணக்கில் காட்டாத தொகை மொத்தம் ரூ.8.79 கோடி இருந்தது. இதனைத்தொடர்ந்து செல்வகுமார் விசாரணைக்காக கோவையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதனால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஈரோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் செலுத்துவதற்காக செல்வகுமாரின் மனைவி பவித்ரா மற்றும் உறவினர்களின் ஒத்துழைப்பை வருமான வரித்துறையினர் நாடினர். இதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டதால் நேற்று மாலை 3.45 மணிக்கு ஈரோட்டில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக வருமான வரித்துறையினர் பணத்தை பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.
பழைய இரும்பு வியாபாரியான செல்வகுமார் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜிஎஸ்டி எடுத்து விட்டு அதற்கான கணக்குகளை 6 வருடங்களாக தாக்கல் செய்யாமல் இருந்துள்ளார். அதனால் இது குறித்து விசாரிப்பதற்காக வந்த அதிகாரிகள் ஏதாவது போலி பில் போடுகிறாரா? என்பதை கண்டறிய அலுவலகத்திற்குள் சோதனை நடத்திய போது ரூ.15 லட்சம் இருந்தது தெரியவந்தது.
அதன் பிறகு தான் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்து அங்கு அதிக அளவில் பணம் இருந்ததை கண்டுபிடித்தனர். செல்வகுமாரின் வீட்டுக்கு அருகிலேயே பழைய இரும்பு மற்றும் பாத்திரம் வியாபாரம் செய்யும் உறவினர்கள் வீடுகளும் உள்ளது. அவர்கள் கூறுகையில், செல்வகுமார் 4ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதால் ஜிஎஸ்டி குறித்து சரியான புரிதல் இல்லாமல் கணக்கு காட்டாமல் விட்டுவிட்டார். ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டதால் இடங்கள் வாங்குவது, விற்பது போன்ற தொழில்களில் செல்வகுமார் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் சில இடங்களை விற்ற பணத்தை வீட்டில் வைத்திருந்தார் என்றனர்.
