திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே காரும் டீசல் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முகிலன் (35). தனியார் கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி ஹேமா (30). இவர்களது மகன்கள் ஸ்ரீநித்து (3), கனிஷ் (9 மாத குழந்தை). ஹேமாவின் தந்தை ஈஸ்வரன் (55). இவர் லாரி புக்கிங் ஆபீஸ் நடத்தி வந்தார். தாய் திருமகள் (50), பாட்டி சிவகாமி (65).
இவர்கள் 7 பேரும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள தங்களது உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக காரில் நேற்று காலை பல்லடத்திற்கு வந்தனர். துக்க நிகழ்ச்சியை முடித்து விட்டு மாலையில் அவர்கள் மீண்டும் ஊத்துக்குளி வழியாக சேலம் சாமிநாதபுரத்திற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். ஊத்துக்குளி அடுத்த காக்காபள்ளம் என்ற இடத்தை அடைந்தபோது, விஜயமங்கலத்தில் இருந்து ஊத்துக்குளி நோக்கி அதிவேகமாக வந்த டீசல் டேங்கர் லாரி, எதிர்பாராதவிதமாக இவர்களது காரின் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் பயணித்த முகிலன், ஈஸ்வரன், திருமகள், சிவகாமி மற்றும் குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காரில் இருந்த ஹேமா படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி கொண்டிருந்தார். போலீசார் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே விபத்து நடந்தவுடன் லாரியை நிறுத்திவிட்டு, அதன் டிரைவர் தப்பியோடிவிட்டார். விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
