மதுரை: நெல்லையைச் சேர்ந்த ரெஜினா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் கணவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். தற்போது அவரது வலது தோள்பட்டையில் வலி மிகுந்த கட்டி மற்றும் கடுமையான வயிற்று வலி உள்ளிட்ட தீவிர உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகிறார். அவரை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, பூர்ணிமா ஆகியோர் விசாரித்தனர். சிறைத்துறை டிஜிபி தாக்கல் செய்த அறிக்கையில், ‘‘இந்தாண்டு ஜன. 1 முதல் மே 31 வரை 46 சிறைகளில் உள்ள 13,699 பேர் மருத்துவ சிகிச்சை கோரி மனு அளித்துள்ளனர். இதில் 3,118 பேர் சிகிச்சை பெற பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10,581 பேர் சிகிச்சை பெற பாதுகாப்பு வசதிக்காக காத்திருக்கின்றனர்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் மொத்தம் 10,581 கைதிகள் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.
சென்னையில் மட்டும் பச்சை வகை பிரிவில் 7,812 கைதிகள் பாதுகாப்பு வசதி கிடைக்காமல் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். இது கவலையளிக்கும் விஷயமாகும். சிறைகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தினால் போலீஸ் பாதுகாப்புக்காக காத்திருக்கும் நேரம் தவிர்க்கலாம். எனவே, சிறைகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சிறைத்துறை டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 20க்கு தள்ளி வைத்தனர்.
