தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக மக்களவை குழுத் தலைவருமான கனிமொழி எம்பி, நேற்று அளித்த பேட்டி: தவெக ஆட்சியில், அவர்கள் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், ஆய்வு என்ற பெயரில் எந்த இடங்களுக்கு போகக்கூடாதோ அந்த இடங்களுக்கு தொடர்ந்து சென்று, அங்கிருக்கும் மக்களுக்கு பல சிக்கல்களை உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக, பள்ளிகளுக்கு சென்று அங்கே இருக்கும் குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும் அளவுக்கும், அவர்களுக்கு மன உளைச்சலை தரும் அளவுக்கும் நடந்து கொள்கிறார்கள்.
இதையெல்லாம் தாண்டி முதல்வர் விஜய்யும் அதை செய்யும்போது, இந்த ஆட்சி எதனை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. முதல்வர் தொடங்கி அமைச்சர் வரை அனைவரும் அவர்களுக்கென பொறுப்புகள் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கரூர் துயரம் குறித்து அதிகமாக பேச விரும்பவில்லை.
ஏனென்றால், இதுபோன்ற துயர சம்பவம் குறித்து பேசுவதை பொறுப்புணர்வுடன் தவிர்ப்பதே நல்லது. விசாரணையில் இருக்கக்கூடிய விஷயம் குறித்து பேச வேண்டாம் என்ற பொறுப்புணர்வு எனக்கு இருப்பதால் கரூர் துயர சம்பவம் குறித்து பேசாமல் இருப்பதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். ஆனால், கரூர் துயரத்தின்போது மக்களோடு நின்றவர்கள் யார்?, அவர்களுக்கு உதவி செய்தவர்கள் யார்? மக்களை தவிக்க விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிப் போனவர்கள் யார்? என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும், இவ்வாறு அவர் கூறினார்.
