சென்னை: பெண்கள் பாதுகாப்பு, ஊழல் பற்றி பேசுவதற்கு விஜய் ஆட்சிக்கு எந்த தகுதியும் இல்லை என்று திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் நேற்று அளித்த பேட்டி: ஒரு முதல்வராக பதவியேற்ற பிறகு காவல்துறையை குற்றம் சொல்வது ஒரு தவறான செயல். காவல்துறையையும், காவல்துறைக்கு அன்றைக்கு ஆளுங்கட்சியாக இருந்தவர்கள் வழிகாட்டினார்கள் என்று பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் இன்னும் திரைப்படத்தை விட்டு வெளியே வரவில்லை.
கரூரில் நினைவுச்சின்னம் அமைப்போம் என்று சொல்லியிருக்கிறார். ஏற்கனவே மக்கள் மனதில் நினைவு சின்னம் இருக்கிறது. கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விமானநிலையத்தில் ஒரு வேக நடை போட்டாரே. அந்த முதுகு தான் கரூர் நினைவுச் சின்னமாக இருக்கும். கரூரில் போகும் போது உங்களை முன்னாடியே நிறுத்த சொல்லி காவல்துறையினர் சொல்லியிருக்கிறார்கள். திரைப்பட யூனிட் கேமராவோட காத்திருக்கிறது என்பதற்காக உள்ளே போனீங்க. இன்றைக்கு காவல்துறை அலர்ட் செய்யவில்லை என்று சொல்றீங்க.
சட்டமன்றத்தில் எங்கள் தலைவர் பேசினார் என்று சொன்னீங்க. எந்த அரசியல் கட்சி தலைவரும், அரசியல் கட்சி தொண்டர்கள் உயிரிழப்பதை விரும்ப மாட்டார்கள் என்று மிகப்பெருந்தன்மையாக சொன்னார். எங்கள் தலைவர் பெருந்தன்மை காட்டியதால் இன்றைக்கு மனதில் பட்டது எல்லாம், வாயில் வந்தது எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். சம்பவம் நடந்து 285 நாட்கள் கழித்து வந்துள்ளீர்கள். அப்ப தான் திமுக உங்களை போக விடாமல் தடுத்தது என்றால், உங்கள் ஆட்சி அமைந்து 2 மாதங்கள் ஆகிறது.
முன்னரே போய் இருக்கலாம். போகவில்லை. மனதில் காயம், வலி எல்லாம் 285 நாட்கள் இருந்தது என்று கேட்டால், இடையில் வந்து உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் கல்யாணம் வீட்டில் எல்லாம் சிறப்பாக கலந்து கொண்டீர்கள். டிசம்பர் 27ம் தேதி உங்களுடைய ஜனநாயகன் திரைப்பட இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்த போது கலந்து கொண்டீர்கள். மிகுந்த மகிழ்ச்சியோடு நடனமும் ஆடினீர்கள். ஆனால், உங்கள் மனதில் காயமும், வலியும் கரூர் போகிற வரைக்கும் இருந்தது என்று சொல்றீங்க. அப்புறம் உங்கள் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினீங்க.
இதை எல்லாம் செய்து விட்டு எனது மனதில் வலியிருந்தது. காயம் இருந்தது என்று சொல்லி, கரூர் வந்து தான் ஆற்றிக்கொள்கிறேன் என்பது ரொம்ப டீ ஆத்துறீங்க என்று மக்களுக்கு தெரியும். பெண்கள் பாதுகாப்பிற்கு இந்த ஆட்சியில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று, சொல்ல முடியுமா?. சொன்னால், உங்கள் கட்சி ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ சரவணனின் வழக்கே உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்திற்கே வரும்.
கடைசியில் என்னாச்சு அந்த எம்எல்ஏவுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போட்டிங்க. அவர் துப்பாக்கியை தூக்கி கொண்டு போய் லாரி டயரை செக் பண்றார். முதலில் உங்கள் கூட்டத்தில் இருப்வர்கள் என்ன பண்றாங்க என்று பாருங்கள். இன்னும், சினிமாவில் வருகிற மாதிரி, வசனத்தை வீராவசனமாக பேசிவிட்டால் இதுவே உண்மையாகிவிடும் என்று நினைத்து விட்டீர்கள். இந்த சோபா மாடல் வேலைகளை நிறுத்தி கொண்டு மக்களுக்கான பணிகளை நீங்கள் தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
