உயிரிழந்த 41 பேரில், பல்வேறு காரணங்களால் 5 குடும்பத்தினர் அரசு பணியை ஏற்க விருப்பமில்லை என்று தெரிவித்திருந்தனர். இதையடுத்து அந்த 5 குடும்பத்தினரையும் முதல்வர் விஜய் தனித்தனியாக அழைத்து நீண்ட நேரம் பேசி அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து சமாதானப்படுத்தினார். இருந்தும் அவர்கள் அரசு வேலையை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து 5 பேரில் உயிரிழந்த அஜிதாவின் அண்ணன் அமர்நாத் கூறுகையில், ‘‘கடந்த 5 ஆண்டுகளாக பெங்களூருவில் பணியாற்றி வருவதால், அரசின் கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பை முதலில் வேண்டாம் என்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்து விட்டேன். நான் ஏற்கனவே பெங்களூருவில் வேலை செய்து அங்கேயே நிலையாக வசித்து வருவதால், அரசு வேலை தேவையில்லை என்று முதலில் தெரிவித்தேன்.
பின்னர், அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பை ஏன் வேண்டாம் என்று கூறுகிறாய் என குடும்பத்தினர் கேட்டனர். அதன்பிறகு, அரசு வேலையை தாய்க்கு கேட்டோம். அதற்கு அதிகாரிகள், கரூருக்கு முதல்வர் விஜய் வரும்போது நேரில் சந்தித்து பேச சொன்னார்கள். அதன்படி கோரிக்கை மனு அளித்தபோது, வேலை வேண்டாம் என்று முன்பு தெரிவித்த 5 பேரையும் தனியாக அழைத்து முதல்வர் விஜய் அண்ணன் பேசினார்.
அப்போது என்னிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும் என்று கூறினார். வேலை உறுதியாக கிடைத்துவிடும் என்று முதல்வர் விஜய் கூறவில்லை. ஆனால், ‘நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து உங்களை தொடர்புகொள்வார்கள். அடுத்தகட்ட நடைமுறைகள் என்ன என்பதை பார்த்து மீண்டும் செயல்முறையை தொடங்குவார்கள்’ என்றார்.
