சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காலவாக்கம் கிராமத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார். முன்னதாக அங்கு வந்த வைகோவை செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் லோகநாதன், வடசென்னை மாவட்ட செயலாளர் ஜீவன் உள்ளிட்டோர் வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை தொடங்குவதற்கு முன்பாக வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், ‘‘நீங்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞரோடு அரசியல் செய்துள்ளீர்கள். அரசியலில் 2 வயதுள்ள ஒரு திரைக் கலைஞரோடு அரசியல் செய்வது உங்கள் தகுதிக்கு உகந்ததா’’ என்று கேட்டார். இதனால் கோபமடைந்த வைகோ செய்தியாளரை சரமாரியாக திட்ட தொடங்கினார். செய்தியாளர் விடாமல் கேள்வி எழுப்பவே, நீ யாரோ சொல்லி இங்கு வந்திருக்கிறாய் என்று ஒருமையில் கூறியதோடு, கடந்த தி.மு.க. ஆட்சி குறித்து குற்றச்சாட்டு சொல்ல ஆரம்பித்தார்.
இதையடுத்து செய்தியாளர் அதை கடந்த இரு நாட்களாகத்தான் சொல்கிறீர்கள், ஏன் கடந்த ஐந்து ஆண்டுகள் அவர்களோடு பயணித்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அது கூட்டணி தர்மத்திற்காக நான் அமைதி காத்தேன். கூட்டணியில் இருக்கும் கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டுவது தர்மம் அல்ல என்றார். அதற்கு செய்தியாளர் அப்படி எனில் நட்பு அடிப்படையில் இடித்து உரைத்திருக்கலாமே என்று கூறி அதற்காக திருக்குறள் ஒன்றை கூறினார்.
அப்போது கடும் கோபமடைந்த வைகோ, எனக்கு நீ திருக்குறள் சொல்லித்தர வேண்டாம், நான் 1330 திருக்குறள்களையும் தெரிந்தவன் என்றார். நீ மஞ்சள் பத்திரிகைகாரன், நீ வெளியே போ, என்னை கேள்வி கேட்க வேண்டும் என்று யாரோ உன்னை அனுப்பி இருக்கிறார்கள், பணம் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறாய் என்று கோபமுடன் கத்திக் கொண்டே இருந்தார்.
இதனால் கட்சியினர் திரண்டு வந்து செய்தியாளரை தாக்க முயன்றனர். மற்ற செய்தியாளர்கள் உடனே குரல் கொடுத்தனர். அப்போது மேடையில் இருந்த வடசென்னை மாவட்ட செயலாளர் ஜீவன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் ஆகியோர் வந்து சமாதானம் செய்து செய்தியாளர்களை வெளியே அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து மதிமுகவினர் பின்னாலேயே வந்து செய்தியாளர்களின் குடும்ப உறுப்பினர்களை பற்றி நா கூசும் வகையில் பேசினர். இதையடுத்து போலீசார் பத்திரிகையாளர்களையும், மதிமுகவினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். சிறிது நேரம் கழித்து வைகோ சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை தொடங்கி வைத்து விட்டு புறப்பட்டு சென்றார்.
