இடமாறுதலுக்கு 67,390 ஆசிரியர்கள் விண்ணப்பம் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு: இன்று முதல் தொடக்கம்

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. அரசுப் பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு 2026-27ம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வித் தகவல் மேலாண்மை முகமையில் இன்று முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக இடமாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள் ஜூன் 15 முதல் 22ம் தேதி வரை தளத்தில் மாறுதல் பெறுவதற்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

ஆசிரியர்கள் தற்போது பணியாற்றும் பள்ளியில் ஓராண்டு பணி நிறைவடைந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மனமொத்த மாறுதல்கள் விண்ணப்பங்கள் சார்ந்த அறிவுரைகள் பொதுமாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் வழங்கப்படும் உள்ளிட்ட பல அறிவுறுத்தல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டிருந்தது.கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் கடந்த 22ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், மாறுதல் கோரும் ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல், காலிப் பணியிடங்களின் விவரம் ஜூன் 25ல் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து ஜூன் 26, 27 தேதிகளில் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து இறுதி முன்னுரிமைப் பட்டியல் நேற்று வெளியானது. இந்நிலையில் தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வித் துறையில் இட மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி தொடக்கக் கல்வியில் 21,372 இடைநிலை ஆசிரியர்கள், 4,447 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1,003 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், 7,249 பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 34,071 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பள்ளிக் கல்விக் கல்வியில் 17,426 பட்டதாரி ஆசிரியர்கள், 10,475 முதுநிலை ஆசிரியர்கள், 1,269 உடற்கல்வி ஆசிரியர்கள், 537 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 978 மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், 981 கணினி ஆசிரியர்கள் என பல்வேறு பதவிகளுக்கு 33,319 பேர் என மொத்தம் 67,390 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இதையடுத்து அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் என்றால் ஜூலை 1, வேறு மாவட்டம் என்றால் ஜூலை 2, அவர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 3, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் என்றால் ஜூலை 4, வேறு மாவட்டம் என்றால் ஜூலை 6 என பல்வேறு பணியிடங்களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்வுக் கலந்தாய்வு ஜூலை 30ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

Related Stories: