குரூப் 1 பணியில் துணை கலெக்டர் உள்பட 26 காலி பணியிடம் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது: செப்டம்பர் 6ம் தேதி முதல்நிலை தேர்வு

சென்னை: குரூப் 1 பணியில் துணை கலெக்டர் உள்பட 26 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. செப்டம்பர் 6ம் தேதி முதல்நிலை தேர்வு நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) துணை ஆட்சியர் 12 பணியிடங்கள், வணிக வரி உதவி ஆணையர் 2, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் 3, தமிழ்நாடு பதிவு பணி மாவட்ட பதிவாளர் 8, தொழிலாளர் உதவி ஆணையர் 1 இடம் என 26 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 23ம் தேதி அறிவித்தது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 30ம் தேதி (நேற்று) தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்து இருந்தது.  அதன்படி குரூப் 1 பணிக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு (www.tnpscexams.in) நேற்று காலை தொடங்கியது. இத்தேர்வுக்கு பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். தொடர்ந்து வருகிற 29ம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்ப திருத்தம் செய்ய ஆகஸ்ட் 2ம் தேதி முற்பகல் 12.01 மணி முதல் 4ம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து செப்டம்பர் 6ம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெறும். காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தகட்டமாக மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காலி பணியிடங்கள் மிகவும் குறைவாக இருப்பதால் தேர்வர்கள் மிகவும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து காலி பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: