சென்னை: தவெக அரசு அமைந்தது முதல் முதல்வர் விஜய் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் இது ஊழலுக்கு எதிரான ஆட்சி. இந்த ஆட்சியில் எந்த மட்டத்திலும் ஊழல் நடக்க விடமாட்டோம் என தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஊழல் புகார் ஒன்றை முன்வைத்துள்ளார்.
அந்தப் பதிவில், ‘‘மாசுகட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட மற்றும் எதிர்பார்க்கப்படும் பணியிட மாறுதல் பட்டியலில் அதிகார துஷ்பிரயோகம் குறித்த தீவிர புகார்கள் எழுந்துள்ளது ஊழலற்ற ஆட்சி என்பதன்மீது கேள்வியை எழுப்புகிறது. தற்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவின் மாமனாரும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் ஓய்வுபெற்ற உறுப்பினர் செயலாளருமான விஜயபாஸ்கர் இதற்கு பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஊழலற்ற நிர்வாகம் என்ற கூற்றை நிலைநாட்ட முதல்வர் இதில் தலையிட வேண்டும்’’ என தெரிவித்துள்ளார். மேலும், தவெக அரசு தரப்பில் என்னை தொடர்புகொண்டு உரிய விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்ததாகவும் பதிவிட்டுள்ளார். தற்போது அவரின் பதிவு பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக இந்த பணியிட மாறுதலில் பணம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
