நெல்லை: திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் மணிமுத்தாறு அருவியில், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 1ஆம் தேதி முதல் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால், மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. குறிப்பாக மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, ஜூன் 4ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். கடந்த 12 நாட்களாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி அருவியைப் பார்வையிட மட்டும் அனுமதித்தனர். 12ஆவது நாளாக திங்கள்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை குறைந்ததால், அருவியில் நீர்வரத்து சீராக உள்ளது. வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12 நாட்களுக்குப் பிறகு இன்று தடை நீக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
