சென்னை: சட்டமன்ற உறுப்பினர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாமை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். 17-ஆவது சட்டப்பேரவைக்குத் தேர்வான அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இருநாள் பயிற்சி முகாம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்றும் நாளையும் காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் கடைப்பிடிக்க வேண்டிய மாண்புகள், நடைமுறைகள், விதிகள் குறித்து அரசுத் துறைச் செயலர்கள் மற்றும் துறை வல்லுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பேரவையில் எதைப் பேசுவதற்கு அனுமதி உள்ளது, எதையெல்லாம் பேசக் கூடாது, கேள்விகள் எழுப்புவதற்கான நடைமுறைகள் என்ன என்பதை பற்றிய முழுப் பயிற்சிகளும் அவர்களுக்கு அளிக்கப்படும். இதில், அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள், மூத்த உறுப்பினர்கள் விருப்பப்பட்டால் பயிற்சியில் பங்கேற்கலாம். அவர்கள் பயிற்சியில் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களுக்கு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.
முதல் கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னர், சட்டப்பேரவைக் குழுக்கள் அமைக்கப்படும் என்று பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார். தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பேரவைக்குப் புதியவர்கள் என்பதால் இந்த பயிற்சி அவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
