பெரம்பூர்: சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் மற்றும் வடமாநில ரயில்கள் அதிகமாக வந்து போகும் இடம் பெரம்பூர் ரயில் நிலையம். வடமாநிலங்களில் இருந்து வரும் பெரும்பாலான மக்கள் பெரம்பூர் ரயில் நிலையங்களில் இறங்கி மற்ற இடங்களுக்கு செல்கின்றனர். இதேபோன்று வட மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில் பெரம்பூரில் நின்று செல்வதால் வட மாநிலத்தவர் பலர் பெரம்பூரில் காத்துக் கிடந்து ரயில் மூலம் தங்கள் ஊருக்கு செல்கின்றனர். இதனால் இந்த ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணபடும். பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வரும் பயணிகளை அழைத்துச் செல்ல ஏராளமான ஆட்டோக்கள் வரிசையிலும் வரிசை இல்லாமலும் நிற்கின்றன.
குறிப்பாக பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மாதவரம் நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து மூலக்கடை மற்றும் ரெட்டேரி சந்திப்பு பகுதிக்கு ஆட்டோக்கள் செல்வது வழக்கம். இங்கிருந்து செல்லும் ஆட்டோக்கள் மூலக்கடை மற்றும் ரெட்டேரி பகுதியில் பொதுமக்களை இறக்கிவிட்டு மீண்டும் அங்கிருந்து சவாரி போட்டுக்கொண்டு பெரம்பூருக்கு வருவார்கள். இப்படி இயக்கப்படும் ஆட்டோக்களில் சில ஆட்டோக்களில் எந்தவித பர்மிட், ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் இல்லாமல் இயக்குவதாகவும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆட்டோ ஓட்டும்போது லைசென்ஸ் உடன் பேட்ஜ் இருப்பதும் கட்டாயம்.
ஆனால் இந்த பகுதியில் ஆட்டோ ஓட்டும் சில ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பேட்ஜ் என்பது இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டும் சில ஆட்டோ ஓட்டுநர்கள் மீது குற்ற வழக்குகளும் உள்ளன. சிலர் சரித்திர பதிவேடு ரவுடிகளாகவும் உள்ளனர். இவர்கள் அவ்வப்போது ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள மற்ற ஆட்டோ ஓட்டுநர்களிடம் தேவையில்லாத பிரச்னைகளில் ஈடுபட்டு அது காவல் நிலையம் வரை சென்று செம்பியம் போலீசார் சிலரை கைது செய்து சிறையிலும் அடைத்துள்ளனர். மேலும் வட மாநிலத்திலிருந்து வரும் சில நபர்களை சில ஆட்டோ ஓட்டுநர்கள் தவறாக வழி நடத்தி அவர்களிடம் பணம் மற்றும் செல்போனை பறித்து செல்வதாகவும் அவ்வப்போது புகார்கள் எழுகின்றன.
செம்பியம் போக்குவரத்து போலீசார் குறிப்பிட்ட பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து மூலக்கடை மற்றும் ரெட்டேரி மற்றும் பெரம்பூர் ரயில் நிலையத்தில் சவாரி ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களில் உரிய ஆவணங்கள் உள்ளதா என்பதை முழுமையாக சரி பார்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுமட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருவதால் பெரம்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க செம்பியம் மற்றும் ஓட்டேரி போலீசார் பெரம்பூர் ரயில் நிலையத்தில் 24 மணிநேர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக பெரம்பூர் ரயில் நிலையத்தின் முன்பக்கமாக உள்ள இரண்டு வாயில்களும் செம்பியம் காவல் நிலையத்திற்கு வருகின்றன. இதேபோன்று பெரம்பூர் ரயில் நிலையத்தில் பின்புறம் உள்ள இரண்டு நுழைவாயில்களும் ஓட்டேரி காவல் நிலையத்திற்குள் வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட போலீசார் இங்கு நிரந்தரமாக போலீஸ் பூத் அமைத்து வெளிப்புறங்களில் இருந்து வரும் நபர்களை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். பெரம்பூர் ரயில் நிலையத்தில் சில திருநங்கைகள் வட மாநில நபர்களை ஏமாற்றி பணம் மற்றும் செல்போனை பதித்து செல்வதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
ஏற்கனவே செம்பியம் போலீசார் இதுபோன்ற வழக்கில் இரண்டு திருநங்கைகளை கைது செய்தாலும் சில திருநங்கைகள் விரும்பத்தகாத செயல்களில் தினமும் ஈடுபடுவதாகவும் இதனால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பொதுமக்கள் அவதி அடைவதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே குறிப்பிட்ட பெரம்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு பெரும் சவாலாக உள்ள அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்களையும் கண்காணித்து தவறு செய்யும் ஒரு சில ஆட்டோ ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.
