மாதவரம் மூலக்கடை மேம்பாலம் அருகே திறந்தவெளி பாராக மாறிய வட்டப்பூங்கா: சமூக ஆர்வலர்கள் வேதனை

 

மாதவரம்: மாதவரம் மூலக்கடை மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு இல்லாததால் வட்டப்பூங்கா சீரழிந்து இரவு நேர திறந்தவெளி பாராக மாறியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மாதவரம் மூலக்கடை சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மேம்பாலம் உள்ளது. பெரம்பூர், வியாசர்பாடி, மணலி, மணலி புதுநகர், மாதவரம் போன்ற பகுதிகளுக்கு சென்று வரக்கூடிய பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த மூலக்கடை சந்திப்பில் கடந்து செல்வதோடு மாநகர பேருந்து, மற்றும் ஆட்டோவில் பயணிப்பதற்காகவும் இங்கு நின்று வாகனங்கள் மாறி செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த மேம்பாலம் திறக்கப்பட்டபோது இதன் கீழே உள்ள பாலத்தை தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூண்களை சுற்றி அழகிய செடிகள் மற்றும் அலங்கார விளக்குகளுடன் வட்ட பூங்கா அமைக்கப்பட்டு அழகுப்படுத்தப்பட்டன. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இந்த வட்ட பூங்காவை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சரியாக பராமரிக்காததால் செடிகள் காய்ந்து கருகிவிட்டன. அலங்கார விளக்குகள் பழுதாகி கம்பங்கள் முறிந்து கிடப்பதோடு மின் வயர்கள் சேதமடைந்து கிடக்கிறது.

அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் மது பிரியர்கள் இந்த மேம்பாலத்தின் கீழே உள்ள வட்ட பூங்காவில் அமர்ந்து மது அருந்திவிட்டு கிளாஸ், காலி மது மற்றும் தண்ணீர் பாட்டில்களையும் அங்கே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் இந்தப் பகுதி துர்நாற்றம் வீசி அலங்கோலமாய் காட்சியளிக்கிறது. சென்னையில் முக்கிய பகுதியான இந்த மூலகடை மேம்பாலத்தின் கீழே இவ்வாறு சுற்றுச்சூழலை சீரழிக்கும் வகையில், வட்ட பூங்கா சீரழிந்த நிலையில், திறந்தவெளி பாராகவும் இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மூலக்கடை மேம்பாலத்தின் கீழே உள்ள வட்ட பூங்காவை முறையாக பராமரிக்கவும், சீரமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கக்கூடிய இந்த மூலக்கடை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தின் கீழே நெடுஞ்சாலைத்துறை சரியாக பராமரிக்காததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மாநகர காவல் மற்றும் போக்குவரத்து போலீசாரின் காவல் பூத்துகள் இருந்தும் அதன் அருகிலேயே இரவு நேரங்களில் இங்கு மது அருந்துகின்றனர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறை துறைக்கும் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் பலமுறை தேசிய நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் கொடுத்துள்ளனர். ஆனாலும், பல்வேறு காரணங்களை கூறி இதற்கு எந்த நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

Related Stories: