சென்னை: சாம்சங் தொழிலாளர்கள் பணிநீக்க பிரச்னையை தீர்த்து வைக்க, தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என இந்திய தொழிற்சங்கங்களின் மைய துணை தலைவர் சவுந்தரராஜன் கூறினார். சென்னை தலைமை செயலகத்தில் இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தின் துணை தலைவர் மற்றும் பிரதிநிதிகள் அடங்கிய 9 பேர் கொண்ட குழுவினர் முதல்வர் விஜய்யை சந்தித்து பல்வேறு கோரிக்கை மனு வழங்கினர். பின்னர் நிருபர்களிடம் சவுந்தரராஜன் கூறியதாவது: தொழிலாளர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய சலுகைகள் மற்றும் உரிமைகள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 4 தொகுப்பு சட்டங்களை தமிழக அரசு அமல்படுத்த கூடாது. சாம்சங் தொழிலாளர்கள் எந்தவித நியாயமுமின்றி வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். இப்பிரச்னையை தீர்த்து வைப்பதாக கடந்த ஆட்சியில் சட்டமன்றத்தில் உறுதியளித்தபடி, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மே தினத்தை கொண்டாடிய சென்னை கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அமைந்திருக்கும் இடத்தை, ஆண்டுதோறும் அரசே மே தினக் கொண்டாட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும். மேலும், இந்தியாவில் முதன்முதலாக பதிவு செய்யப்பட்ட சென்னை தொழிலாளர் சங்கம் அமைந்திருந்த பெரம்பூர் பின்னி ஆலை அருகே உள்ள அலுவலகம் சிதிலமடைந்துள்ளது. அதை அரசு மீட்டு, அங்கு தொழிற்சங்க இயக்கத்தை நினைவுபடுத்தும் வகையில் ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் 1990 முதல் செயல்பாட்டில் உள்ள நலவாரிய முறையை முடக்கும் வகையில், ஒன்றிய அரசு டெல்லியில் ‘ஒரே நலவாரியம்’ என்ற திட்டத்தைக் கொண்டு வரப் பார்க்கிறது.
மேம்பட்ட நம் மாநில நலவாரியங்கள் முடக்கப்படாமல் அரசு பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள வடமாநில புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சட்டப்படியான சலுகைகள் கிடைப்பதில்லை. இது தொடர்பான சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டறிந்த முதலமைச்சர், கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப் பார்க்கிறேன் என்று உறுதியளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.
