காரமடை: கோவை மாவட்டம், காரமடையை அடுத்துள்ள வெள்ளியங்காடு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி அருகிலேயே பத்ரகாளியம்மன் கோயில், தனியார் பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளன. இதனால் இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். இதன் அருகிலேயே தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு வரும் குடிமகன்கள் மது அருந்தி விட்டு சாலையோரங்களில் அரைகுறை ஆடையுடன் விழுந்து கிடப்பதால் அவ்வழியே செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்து முடிந்த 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நடந்தது. இதற்காக மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த் வந்தார். அப்போது, பள்ளியில் நடந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு அவர் வெளியே கிளம்பிய போது அவரை முற்றுகையிட்ட அப்பகுதியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள், நோயாளிகள், முதியவர்களுக்கு தொந்தரவாக இருந்து வரும் இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு பள்ளி வளாகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மனுக்களை வழங்கினர்.
