தாம்பரம் மாநகராட்சியில் ரூ.7.44 கோடியில் திட்ட பணிகள்: அமைச்சர் சரத்குமார் திறந்து வைத்தார்

 

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.7.44 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை, மனிதவள மேலாண்மை துறை அமைச்சரும், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான த.சரத்குமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில், 45வது வார்டு, திருப்பூர் குமரன் பூங்காவில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் நீர்தேக்க தொட்டி அமைத்தல் பணிக்கு அமைச்சர் சரத்குமார் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து, 69வது வார்டு, சுருதி சாய் நகர் பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்காவினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சரத்குமார் திறந்து வைத்தார்.

33வது வார்டு, சானடோரியம் பகுதியில் ரூ.14 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடை, 14வது வார்டு, பல்லாவரம் பான்ட்ஸ் மேம்பாலம் கீழ் பகுதியில் ரூ.2 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் பசுமையாக்குதல் மற்றும் நடைபாதை அமைத்தல், பல்லாவரம் மேம்பாலம் கீழ் பகுதியில் ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் பசுமையாக்குதல் மற்றும் நடைபாதை அமைத்தல் பணிகள் முடிவுற்ற நிலையில் அவற்றை பயன்பாட்டிற்கு அமைச்சர் சரத்குமார் திறந்து வைத்தார். 21வது வார்டு, ஏஜிஎஸ் நகர் பகுதியில் ரூ.88 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வார்டு அலுவலக கட்டிடம் என மொத்தம் ரூ.7 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் இருந்தனர்.

 

Related Stories: