சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. பாடப்பிரிவை தேர்வு செய்த மாணவர்களுக்கு உடனடியாக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் 180 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் பிஏ, பிஎஸ்சி, பிபிஏ, பிபிஎம் பிகாம், பிசிஏ உள்ளிட்ட இளங்கலை பட்டப்படிப்புகளில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 959 இடங்கள் உள்ளன. இவற்றில் 2026-27ம் கல்வி ஆண்டில் இந்த இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7ம் தேதி தொடங்கி 29ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 24 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதை தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் தமிழ் மாணவர்கள் ஆகிய சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு அந்தந்த கல்லூரிகளில் ஜூன் 5 மற்றும் 6ம் தேதி நடந்தது. இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தமிழகம் முழுவதும் அந்தந்த அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நேற்று தொடங்கியது. கலந்தாய்வில் பங்கேற்று பிடித்தமான பாடப்பிரிவை தேர்வுசெய்த மாணவர்களுக்கு உடனடியாக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
சென்னையில் மாநிலக் கல்லூரி, நந்தனம் அரசு கல்லூரி, ராணி மேரி கல்லூரி மற்றும் வியாசர்பாடி அரசு கல்லூரியில் நடந்த கலந்தாய்வில் பிடித்தமான பாடப்பிரிவை தேர்வுசெய்த மாணவர்கள் உடனடியாக ஒதுக்கீட்டு ஆணையை பெற்றுக்கொண்டனர். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கிடையே, அரசு கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் ஜூன் 1 முதல் மீண்டும் விண்ணப்பிக்க கல்லூரி கல்வி ஆணையரகம் காலஅவகாசம் வழங்கியது. அதன்படி மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு 2வது கட்ட கலந்தாய்வு மூலம் பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை மாநில கல்லூரியில் உள்ள 2,380 இடங்களுக்கு 46 ஆயிரம் மாணவர்கள் பலவகையான பாடப் பிரிவுகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். நேற்று நடைபெற்ற பொது பிரிவினருக்கான கலந்தாய்வில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கட் ஆப் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்றனர். இதுகுறித்து சென்னை மாநில கல்லூரி முதல்வர் ராமன் கூறுகையில், ‘‘கடந்த 5 வருடங்களாக அகில இந்திய ரேங்கில், சென்னை மாநிலக் கல்லூரி முதல் 10 இடங்களுக்குள் வருவதால் இக்கல்லூரியில் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். எந்த வருடமும் இல்லாத அளவிற்கு 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில கல்லூரியில் விண்ணப்பித்துள்ளனர்.
முதன் முறையாக 22 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக சென்னை, விழுப்புரத்தை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சிறப்பு பிரிவினர் மற்றும் பொதுப்பிரிவினர் சேர்த்து நேற்று வரை 30 சதவிகித இடங்கள் நிரம்பி விட்டது’’ என்றார்.
