சென்னை: தலைமை செயலகத்தில் சந்தித்து நேற்று வாழ்த்து பெற்றபோது, முதல்வர் விஜய்யுடன் செஸ் விளையாடி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு உயரிய ஊக்கத்தொகை ரூ.50 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் வழங்கி, பாராட்டினார். செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ.30 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நார்வேயில் நடந்த புகழ்பெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் சாம்பியன் பட்டம் வென்று, சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார்.
இவர் நேற்று முதல்வர் விஜய்யை சென்னை, தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது முதல்வர் விஜய்யுடன் பிரஸ்ஞானந்தா செஸ் விளையாடினார். நார்வே செஸ் தொடரில் இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்ததற்காக முதல்வர் அவரை பாராட்டினார்.
முதல்வர் சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் பிரக்ஞானந்தா கூறியதாவது:
நார்வே செஸ் தொடரில் பட்டம் சென்றதை பாராட்டி, உயரிய ஊக்கத்தொகை ரூ.50 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் விஜய் எனக்கு வழங்கினார். செஸ் போர்டு முதலமைச்சர் எடுத்து வர சொன்னார். முன்பை விட சதுரங்க விளையாட்டிற்கு நல்ல அங்கீகாரம் கிடைத்துள்ளது. என்னுடன் சதுரங்க போட்டியை விளையாடலாமா என கேட்டார் முதல்வர். நானும் முதல்வர் விஜய்யும் சதுரங்க போட்டி விளையாடினோம். 2 நிமிடத்தில் நான் வெற்றி பெற்றுவிட்டேன். அவர் செஸ் விளையாடுவார் என எனக்கு தெரியாது. இதில் நான் வெற்றி பெற்றேன். இவ்வாறு அவர் கூறினார்.
