சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறையில் விஜய் அமரும் நாற்காலி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் மர நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையில், ப்ரீமியம் சொகுசு நாற்காலி புதிதாக போடப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதல்வராக கடந்த மே 10ம் தேதி விஜய் பதவியேற்றார். முதல்வராக பதவியேற்றது முதலே பல்வேறு விஷயங்களை விஜய் மாற்றி வருகிறார். அதாவது, தமிழக அரசியல் வாதிகள் பொதுவாகவே வேட்டி சட்டை அணியவார்கள். இந்த கலாச்சாரத்தை விஜய் மொத்தமாக மாற்றி கருப்பு நிற கோட், வெள்ளை சட்டை அணிந்து தான் தினமும் தலைமைச் செயலகத்திற்கு வருகிறார்.
மேலும், விஜய் தினமும் காலை 9.30 மணிக்கெல்லாம் தலைமைச் செயலகம் வந்துவிடுகிறார். மதிய உணவிற்கு வீட்டிற்கு கூட செல்வது இல்லை. அதற்கு பதிலாக வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை சாப்பிடுகிறார். சனி, ஞாயிறு என்றால் தலைமைச் செயலகம் வருவது இல்லை. விஜய் முதல்வராக பதவியேற்றபோது, தலைமைச் செயலகத்தில் அவரது அறையில் வெள்ளை துண்டு போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்தார். இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அதாவது இருக்கையில் வெள்ளை துண்டு விரிப்பது என்பது ஆங்கிலேயர் காலத்து நடைமுறையாகும். அதோடு இது விஜபி கலாச்சாரமாகும். இதனால் அதனை கைவிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து, சில நாட்களுக்கு பிறகு அந்த வெள்ளை துண்டு அகற்றப்பட்டு, வெறும் மர நாற்காலியில் விஜய் அமர்ந்து வந்தார். எந்தவித பந்தாவும் இல்லாமல், சாதாரண மர நாற்காலியில் முதல்வர் விஜய் அமர்ந்துள்ளதையும், அவரது ரசிகர்கள் ஆகோ, ஓகோ என்று சமூகவலைதளங்களில் புகழ்ந்து தள்ளினர். இதே நாற்காலியைத்தான் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது விஜய் கடந்த 28 நாட்களாக பயன்படுத்தி வந்த மர நாற்காலியும் மாற்றப்பட்டுள்ளது. மர நாற்காலியில் அமர்ந்து வந்த விஜய், தற்போது பிரீமியம் சேரில் அமர்ந்துள்ளார். தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறையில் அவருக்கு அதிநவீன குசன் சேர் போடப்பட்டுள்ளது. இதில் அமர்ந்து தான், நேற்று முதல் பணிகளை முதல்வர் விஜய் செய்து வருகிறார். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசும் பொருளாக மாறியுள்ளது.
முதல்வர் விஜய் மர நாற்காலியில் அமர்ந்திருந்தார். அதில் நீண்ட நேரம் அமருவதால் முதல்வர் விஜய்க்கு முதுகு வலி ஏற்படுகிறதாம். இதன் காரணமாக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன குசன் சேரில் விஜய் தற்போது அமர்ந்திருக்கிறார். விலை உயர்ந்த பிரீமியம் மாடல் நாற்காலி தலைமைச் செயலகத்தில் போடப்பட்டுள்ளது. இந்த அதிநவீன பிரீமியம் நாற்காலியின் விலை ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை இருக்குமாம்.. ஒரு சிலர் இது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நாற்காலி என்றும் கூறுகிறார்கள்.
கடந்த மாதம் டெல்லி முதல்வர் ரேகா குப்தாவும் தனது அறையில் சொகுசு நாற்காலியை மாற்றியுள்ளது சர்ச்சைக்குள்ளானது. ரேகா குப்தாவின் சொகுசு நாற்காலியின் விலை ரூ.80,000 இருக்குமாம். இது ரெட் ஓக் இம்பீரியோ வகையைச் சேர்ந்த ஒரு பிரீமியம் நாற்காலியாகுமாம். ரேகா குப்தாவின் நாற்காலி விமர்சனங்களை எழுப்பியது. இந்த நிலையில், தற்போது முதல்வர் விஜய் சொகுசு நாற்காலிக்கு மாறியுள்ளது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
நடிகராக இருந்து தமிழக முதல்வராக வந்துள்ள விஜய், ஆரம்பம் முதல் அவர் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் மிகவும் விலை உயர்ந்த பொருளாகவே பயன்படுத்தி வருகிறார். அவர் பயன்படுத்தும் பிஎம்டபிள்யு கார் விலை ரூ.3 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தினமும் புது கோட், சூட் அணிந்து தலைமை செயலகம் வருகிறார். ஒரே கலர் என்பதால் ஒரு நாள் போட்ட உடையை அவர் மீண்டும் அணிவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர் தினமும் புது உடைகளை அணிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த ஆடையும் லட்சக்கணக்கில் செலவு செய்து வடிவமைக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது அவர் பயன்படுத்தும் சொகுசு நாற்காலியும் இந்த லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளது. மொத்தத்தில், முதல்வர் விஜய் ஆடம்பரத்தையே விரும்புகிறார் என்ற தகவல் மக்கள் மனதில் ஓடத்தொடங்கியுள்ளது.
