தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 18ல் கூடுகிறது: சபாநாயகர் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் 18ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு சட்டசபை பேரவையின் கூட்டம் வரும் 18ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூடும். அன்று ஆளுநர் உரை நிகழ்த்துவார்.

அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் முடிந்த பிறகு, சட்டசபையின் அலுவல் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும். அலுவல் ஆய்வுக் குழு கூடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். வந்தே மாதரம், தேசிய கீதம் குறித்த மரபுகள், ஏற்கனவே உள்ளது போல்தான் இருக்குமா? அதில் ஏதும் மாற்றம் உள்ளதா? என்று கேட்டதற்கு, சட்டமன்றத்தில் ஆளுநர் உரை நிகழும்போது என்ன நடக்கிறது? என்பதை நீங்களே பார்கலாம். அதிமுக சார்பில் இரு தரப்பிலும் மனுக்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

அதில் முடிவெடுத்திருந்தால் உடனே அறிவித்திருப்பேன். அதிமுகவின் அனைத்து மனுக்களும் இன்னும் ஆய்வில் தான் உள்ளன. அதுபற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். உரிய நேரத்தில் ஆய்வு முடிந்த பிறகு அறிவிக்கப்படும்.  அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் காலகட்டத்தில் சட்டசபையின் நடவடிக்கைகளை மக்கள் நேரலையில் பார்த்தனர்.

சட்டமன்ற நிகழ்வுகளை அதிகமாக பார்ப்பதற்கு மக்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அரசியலுடன் நேரடியாக தொடர்பில்லாத இளம் வயதினர் கூட மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். முதல்வர், அமைச்சர்கள் எப்படி செயல்படுகின்றனர் என்பதை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: