போலி ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை 20% அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி தகவல்

புதுடெல்லி: கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26ம் நிதியாண்டிற்கான வருடாந்திர அறிக்கையை ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது. இதில், போலி 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளது. 2026 நிதியாண்டில் வங்கி அமைப்பிற்குள் கண்டறியப்பட்ட போலி ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 5.7 சதவீதம் அதிகரித்துள்ளது. கண்டறியப்பட்ட மொத்த போலி நோட்டுகளின் எண்ணிக்கை முந்தைய நிதியாண்டில் இருந்த 2,17,396ல் இருந்து தற்போது 2,29,746 ஆக அதிகரித்துள்ளது.

இதில் ரூ.500 நோட்டுகளே அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளன. 2025 நிதியாண்டில் 1,17,722 ஆக இருந்த போலி ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 20.5 சதவீதம் அதிகரித்து 1,41,907 தாள்களாக உயர்ந்துள்ளது. அதே சமயம் போலி 200, 100, 50 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை முந்தைய நிதியாண்டோடு ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மேலும், புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டாக 500 ரூபாய் மதிப்பு நோட்டுகள் இருக்கின்றன. 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 7,05,482 லட்சம் தாள்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 6,34,458 லட்சம் தாள்களாக இருந்தன. மொத்த நோட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகள் அதிகபட்சமாக 41.2 சதவீத பங்கை கொண்டுள்ளன. மார்ச் 31,2026 நிலவரப்படி, ரூ.2000 நோட்டுகள் 98.45 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளன. கள்ள நோட்டுகளை ஒழிக்க, பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளே தீர்வாக இருக்கும் என்றும் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

Related Stories: