கொல்கத்தா: வீட்டு வேலை செய்து வந்த பெண்மணி ஒருவர் தற்போது மாநில அமைச்சராக உயர்ந்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அவுஸ்கிராம் தனித் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட கலீதா மாஜி (37), திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் அபேதானந்தா தண்டரிடம் தோல்வியடைந்தார். அந்தத் தேர்தலில் 88,577 வாக்குகள் பெற்ற அவர், இரண்டாம் இடத்தையே பிடிக்க முடிந்தது.
10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர், மாதம் 4,000 ரூபாய் ஊதியத்திற்கு மற்றவர் வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார். இவரது கணவர் சுப்ரதா மாஜி ஒரு பிளம்பர் தொழிலாளி ஆவார். வறுமையின் பிடியில் இருந்தாலும் விடாமுயற்சியுடன் பணியாற்றிய இவருக்கு, சமீபத்தில் நடந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியது. தற்போது நடந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சியாம பிரசன்ன லோஹரை 12,535 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கலீதா மாஜி அபார வெற்றி பெற்றார்.
மொத்தம் 1,07,692 வாக்குகள் பெற்று அவுஸ்கிராம் தொகுதியை பாஜக வசமாக்கிய அவர், நேற்று அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘எனது தொகுதியில் தார் சாலைகள், குடிநீர் வசதி, இளைஞர் மேம்பாடு மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதே எனது முக்கிய நோக்கம். ஒன்றிய அரசின் வீட்டு வசதி திட்டம் மற்றும் கழிப்பறை திட்டங்களை எனது பகுதியில் முழுமையாக செயல்படுத்தி, ஏழை மக்களுக்கு தரமான மருத்துவமனை கட்டிக் கொடுப்பதே எனது லட்சியம்’ என்றார்.
