சென்னை: அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் தொழிலதிபர் அனில் அகர்வாலுக்கு சொந்தமான சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். நாட்டின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவராக அனில் அகர்வால் உள்ளார். மும்பையை தலைமையிடமாக கொண்டு இவரது வேதாந்தா குழுமம் இயங்கி வருகிறது. கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய ‘பிராண்ட் கட்டணம்’ செலுத்தியது தொடர்பாக அமலாக்கத்துறை கண்காணிப்பில் வேதாந்தா குழுமம் உள்ளது.
அந்த வகையில் நாடு முழுவதும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சென்னை நுங்கம்பாக்கம் மங்காடு சாமி தெருவில் ‘வேதாந்தா இன்ஸ்டிடியூட்’ இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு சீன விசா முறைகேடு தொடர்பாக அப்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதேநேரம் இன்று நடைபெறும் சோதனை வெளிநாடுகளில் பிராண்ட் கட்டணம் செலுத்தியது தொடர்பாக நடப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் இந்த சோதனை வழக்கு தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதால், சோதனை முடிவில் தான் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக தகவல்கள் வெளியே வரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
