மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரசை போல் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் உடைகிறது?.. அதிருப்தி எம்பி, எம்எல்ஏக்கள் ரகசிய ஆலோசனையால் பரபரப்பு

 

கொல்கத்தா: மேற்குவங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், மகாராஷ்டிரா பாணியில் கட்சி பிளவுபட வாய்ப்புள்ளதாக பரபரப்பு கிளம்பியுள்ளது. மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் முன்னாள் முதல்வரான மம்தா பானர்ஜி, பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்த நிலையில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உடைந்து சிவசேனா (உத்தவ்), சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) என்றும், தேசியவாத காங்கிரஸ் உடைந்து தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) என்ற புதிய அணிகள் உருவானதை போல, தற்போது திரிணாமுல் காங்கிரசிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பிய ரிதப்ரதா பந்தோபாத்யாய மற்றும் சந்தீபன் சாஹா ஆகிய 2 எம்.எல்.ஏக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த நடவடிக்கை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜி இல்லாத புதிய திரிணாமுல் காங்கிரஸ் உருவாகலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில், கொல்கத்தாவில் உள்ள மம்தா பானர்ஜி இல்லத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த 80 எம்.எல்.ஏக்களில் 60 பேர் பங்கேற்காமல் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

வெறும் 20 எம்.எல்.ஏக்கள் மட்டுமே மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்தது கட்சிக்குள் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், கூட்டத்தில் பங்கேற்காத சில எம்.எல்.ஏக்கள் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலிலும், அமைச்சர் ரதின் கோஷ் இல்லத்திலும் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 50 எம்.எல்.ஏக்கள் மற்றும் சில எம்.பிக்கள் தனியாக பிரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி குறித்து பேஸ்புக் லைவ் மூலம் விளக்கம் அளித்த மம்தா பானர்ஜி, ‘ஆலோசனை கூட்டத்திற்கு வரவிருந்த 4 எம்.எல்.ஏக்களை போலீசார் மிரட்டியுள்ளனர்.

கூட்டத்தில் பங்கேற்றால் ஆயுத சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் மீதான ஒடுக்குமுறை எல்லை மீறிவிட்டது. கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் துரோகிகளாக செயல்படுகின்றனர்’ என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார். இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ குணால் கோஷ் கூறுகையில், ‘70 வயது பெண்மணி மாநிலம் முழுவதும் அயராது உழைத்ததை பயன்படுத்திதான் அனைவரும் எம்.எல்.ஏக்களாக வெற்றி பெற்றனர். சுயநலத்திற்காக கட்சியை உடைக்க நினைப்பவர்களுக்கு மனசாட்சி இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: