பெரியபாளையம் பகுதியில் ஆரணியாற்றின் பாலத்தின் கீழ் கொட்டப்படும் குப்பை, இறைச்சி கழிவுகளால் நோய் அபாயம்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் ஆரணியாற்றின் பாலத்தின் கீழ் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளால் நோய் பரவி, பாலம் பலவீனமடையும் அபாயம் ஏற்படுவதால் பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பெரியபாளையம் கிராமம் உள்ளது. இங்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள ஆரணியாற்றின் கரை ஓரத்தில் புகழ் பெற்ற பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். மேலும் சென்னை, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி போன்ற பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் ஆரணியாற்றை கடந்து தான் அம்மன் கோயிலுக்கு செல்ல வேண்டும்.

அவ்வாறு செல்லும் பக்தர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை கடந்து தான் கோயிலுக்கு செல்ல வேண்டும். இந்த பாலம் பவானி அம்மன் கோயிலை இணைக்கும் முக்கிய பாலமாகும். மேலும் சென்னையிலிருந்து திருப்பதி, புத்தூர் செல்பவர்களும் பெரியபாளையம் தரைப்பாலத்தை கடந்து தான் செல்வார்கள். இந்நிலையில் பெரியபாளையம் ஆரணியாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி திமுக ஆட்சியில் 1999ம் ஆண்டு மேம்பாலம் கட்டப்பட்டது. அதன்பிறகு மக்களும், பக்தர்களும் நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில் இந்த பாலத்தின் அருகில் உள்ள கடைகளில் இருந்து குப்பைகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும், இறைச்சி கழிவுகளையும் பாலத்தின் கீழ் கொட்டுகிறார்கள். இதனால் அப்பகுதி துர்நாற்றம் வீசுகிறது. இதன் அருகில் சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் துர்நாற்றம் தாங்கமுடியாமல் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த குப்பை கழிவுகளால் பாலத்தின் அடிப்பகுதி சேதம் அடையும் நிலை உள்ளது. இதனால் பாலத்தின் தூண்கள் பலவீனமாகி வருகிறது. மேலும் பாலத்தின் ஓரத்தில் செடிகள் வளர்ந்துள்ளது. எனவே சம்மந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பாலத்தின் கீழ் உள்ள கழிவுகளையும், செடிகளையும் அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பெரியபாளையம் ஆரணியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் வழியாக அரசு மேல் நிலைப்பள்ளி, அரசுமருத்துவமனை, வட்டார வளர்ச்சி அலுவலகம், பவானி அம்மன் கோயில் செல்லவேண்டும். மேலும் ஆந்திர மாநிலம் புத்தூர், திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இந்நிலையில் இந்த பாலத்தின் அடிப்பகுதியில் குப்பைகளும், பிளாஸ்டிக் கழிவுகளும், இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுகிறது. இதனால் பாலத்தின் தூண்கள் சேதம் அடைய வாய்ப்புள்ளது. மேலும் இந்த குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயமும், பாலம் பலவீனம் அடையும் நிலை உள்ளது.

தற்போது மழைநீர் ஆற்றில் தேங்கி நிற்பதால் அந்த தண்ணீரில் குப்பைகள் கலந்து தண்ணீர் மாசடைகிறது. மேலும் இந்த தண்ணீரில் பவானி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் குளிக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் ஆற்றின் கரையோரத்தில் உள்ள வீடுகளிலிருந்தும், கழிவுநீரை ஆற்றில் விடுகிறார்கள் இதை தடுக்க வேண்டும். எனவே இந்த குப்பை கழிவுகளை அகற்றி, பாலத்தின் கீழ் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறினர்.

Related Stories: