×

கல்லூரிக் கல்வி ஆணையராக மூத்த கல்லூரி முதல்வரை நியமிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை : தமிழக கல்லூரிக் கல்வி ஆணையராக மூத்த கல்லூரி முதல்வரை நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு கல்லூரிக் கல்வி ஆணையராக பி. பொன்னையா என்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியை தமிழக அரசு நியமித்திருக்கிறது. கல்லூரிக் கல்வி இயக்குனராக உயர்கல்வி குறித்த அனுபவம் பெற்ற மூத்த கல்லூரி முதல்வரை நியமிக்கும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், புதிய அரசும் பழைய நடைமுறையையே தொடர்வது ஏமாற்றமளிக்கிறது.

கல்லூரிகளை நிர்வகிப்பது என்பது மேலாண்மை சார்ந்த விஷயமோ, வரவு மற்றும் செலவு கணக்கு சார்ந்ததோ சிக்கலோ அல்ல…. மாறாக, அது முழுக்க முழுக்க கல்வி வளர்ச்சி சார்ந்தது ஆகும். அதை கவனிக்க கல்வியாளர்கள் தான் முடியும். எந்தவொரு துறையாக இருந்தாலும், அதை வழிநடத்திச் செல்ல துறை சார்ந்த அனுபவமும், அறிவும் அவசியம் என்பதால் தான் மிகவும் முக்கியமானத் துறைகளில் இயக்குனர்கள், தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பதவிகளில் துறை சார்ந்தவர்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

கொள்கை முடிவுகளை எடுக்கும் செயலாளர்கள் நிலையில் இ.ஆ.ப. அதிகாரிகள் நியமிக்கபட்டாலும், நிர்வாகம் சார்ந்த பொறுப்புகளில் துறை சார்ந்தவர்களை நியமிப்பது தான் பல பத்தாண்டுகளாக வழக்கமாக உள்ளது. சீர்திருத்தம் என்ற பெயரில் இந்த நடைமுறைகளை மாற்றுவது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். கடந்த அரசு, பள்ளிக்கல்வி ஆணையராக இ.ஆ.ப. அதிகாரியை நியமித்தது.

பள்ளிக்கல்வித் துறையில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டதால், 2023ம் ஆண்டு பள்ளிக்கல்வி ஆணையர் பொறுப்பும், அதில் இ.ஆ.ப. அதிகாரியை நியமிக்கும் நடைமுறையும் கைவிடப்பட்டு, மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் பொறுப்பில் கல்வித்துறையின் மூத்த அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டது.

எனவே, பள்ளிக்கல்வித் துறையில் ஐந்தாண்டுகளுக்கு முன் இழைக்கப்பட்ட தவறு எவ்வாறு திருத்தப் பட்டதோ, அதேபோல், இரு ஆண்டுகளுக்கு முன் கல்லூரிக் கல்வித் துறையில் இழைக்கப்பட்ட தவறும் திருத்தப்பட வேண்டும். அதற்காக கல்லூரிக் கல்வி ஆணையராக இ.ஆ.ப. அதிகாரி பொன்னையாவை நியமிக்கும் ஆணையை ரத்து செய்து விட்டு, கல்லூரிக் கல்வி இயக்குனர் பொறுப்பில் அரசு கல்லூரிகளில் பணியாற்றும் முதல்வர்களில் அதிக அனுபவம் கொண்ட ஒருவரை நியமிக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Anbumani ,Chennai ,PMK ,Tamil Nadu ,P. Ponnaiah ,
× RELATED தமிழகம் முழுவதும் 68 சுங்கச்சாவடிகளில்...