திருச்சி: லால்குடி தொகுதியில் வெற்றி பெற்று 1 மாதமாகியும் வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல லீமா ரோஸ் செல்லாததால் அதிமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் லீமாரோஸ். இவர், கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி. தற்போது தவெக அமைச்சரவையில் அமைச்சராக உள்ள ஆதவ் அர்ஜூனாவின் மாமியார். சட்டமன்ற தேர்தலுக்கு பின் இவர், வேலுமணி அணியில் இணைந்து செயல்பட்டார்.
அந்த அணியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் அண்மையில் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்தனர். எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய லீமா ரோஸ் தான் காரணம், இவர் தான் பணத்தாசை காட்டி தவெக பக்கம் திருப்பி விட்டார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை லீமா ரோஸ் திட்டவட்டமாக மறுத்தார். “அதிமுகவில் பிரிவுகள் ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சில வாடகை பேச்சாளர்களால் பரப்பப்பட்ட வதந்தி இது’ என்று கூறினார்.
இந்நிலையில் வெற்றி பெற்று 1 மாதமாகியும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க லீமா ரோஸ் தனது சொந்த தொகுதியான லால்குடிக்கு வரவில்லை என்பதால் அவர் மீது அதிமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மே 4ம்தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில் வெற்றி பெற்றதும், வெற்றிச்சான்றிதழோடு லீமாரோஸ் சென்னை புறப்பட்டு சென்றார். அங்கு வேலுமணி அணியில் இணைந்து செயல்பட்டார். பின்னர் வேலுமணி அணி, மீண்டும் எடப்பாடி அணியுடன் இணைந்து விட்டது.
இதன் பிறகு அதிமுக எம்எல்ஏக்கள் சொந்த தொகுதிகளுக்கு திரும்பி நன்றி கூறி வருகின்றனர். ஆனால் லீமா ரோஸ் மட்டும் லால்குடிக்கு வராமல் சொந்த ஊரான கோவைக்கு சென்று விட்டார். மற்ற கட்சிகளில் தோல்வி அடைந்தவர்கள் கூட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வரும் சூழலில், லீமா ரோஸ் இன்னும் நன்றி சொல்ல வராதது அதிமுகவினரிடம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அணி தாவுவதில் இருந்த ஆர்வம், சுறுசுறுப்பு வாக்காளர்களுக்கு நன்றி சொல்வதில் இல்லை என்றனர்.
