தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த கும்பல் பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி- ராமேஸ்வரம் சாலையில் கீழ அரசடி பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்க்கிற்கு நேற்று முன்தினம் பைக்கில் 3 பேர் வந்துள்ளனர்.
பைக்கிற்கு பெட்ரோல் போட கூறிய அவர்களில் ஒருவர் பெட்ரோல் பங்கில் உள்ள கழிப்பறைக்கு செல்லாமல் வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்பும் பகுதி அருகே சிறுநீர் கழித்துள்ளார். இதைப்பார்த்த பங்க் ஊழியர், அவரை சத்தம் போட்டுள்ளார். அவரிடம் தகராறு செய்த 3 பேர், பின்னர் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில் மாலையில் மீண்டும் 10 பேருடன் வந்த போதை கும்பல், பெட்ரோல் பங்க் உள்ளே நுழைந்து ஊழியர்களை உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் பயங்கரமாக தாக்கியது.
மேலும் பெட்ரோல் பங்க், அலுவலகத்தையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி விட்டு பைக்குகளில் தப்பிச் சென்று விட்டது. இதுகுறித்து ஊழியர் சவுரவ்(29), தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், பங்க்கில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 10 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
