திருவண்ணாமலை: திருவண்ணாமலை கலெக்டராக பணிபுரிந்து வந்த தர்ப்பகராஜ், கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட புதிய கலெக்டராக வந்தனா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். பிஎஸ்சி மைக்ரோ பயாலஜி, எம்எஸ்சி பயோ மெடிக்கல் சயின்ஸ் பட்டதாரியான இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். சேலம் மாவட்டத்தில் உதவி ஆட்சியர் பயிற்சி முடித்து, திருப்பத்தூர் சப் கலெக்டர் ஆக பணிபுரிந்தார்.
பின்னர், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குனராகவும், கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் கலெக்டராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது, திருவண்ணாமலை மாவட்டத்தின் 25வது கலெக்டராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், புதிய கலெக்டர் வந்தனா கார்க் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.
அவரிடம் பணிகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவிப்பதற்காக கலெக்டர் அறையில் பணி மாறுதலில் செல்லும் கலெக்டர் தர்ப்பகராஜ் காத்திருந்தார். அவசர அவசரமாக அலுவலக அறைக்குள் பொறுப்பேற்க வந்த புதிய கலெக்டர் வந்தனா, கலெக்டர் இருக்கைக்கு சென்று கோப்பில் கையெழுத்திட முயன்றார். அப்போது, பூங்கொத்துடன் சென்று வாழ்த்துக்கள் என பழைய கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்தார்.
அவரை பார்த்தபடி, உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என கலெக்டர் வந்தனா கார்க் சொன்னதும், ‘நான் தான் கலெக்டர்’ என பழைய கலெக்டர் தர்ப்பகராஜ் சொல்ல, அதிர்ச்சியும் வெட்கமும், சிரிப்பும் கலந்து சாரி சார் என்றார் கலெக்டர் வந்தனா கார்க். அதனால், அந்த அறை சிரிப்பொலியால் நிறைந்தது. இந்நிலையில், இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
