×

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொலைவெறி தாக்குதலில் தேடப்பட்ட ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு: போலீசாரை வெட்டி விட்டு தப்ப முயன்றதால் அதிரடி நடவடிக்கை

வீரவநல்லூர்: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 8 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் தலைமறைவான ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நெட்டூரில் கடந்த 29ம் தேதி நடந்த திருமண வரவேற்பு விழாவின் போது, 4 பைக்குகளில் முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து வந்த 12 பேர் கொண்ட கஞ்சா கும்பல், மண்டபத்தின் வெளியே நின்ற அப்பகுதியை சேர்ந்த அருள்மாறன், அவரது தந்தை ரமேஷ், ராயப்பன், அனந்தபுரத்தைச் சேர்ந்த ராம்குமார், நெட்டூரைச் சேர்ந்த குமார், குலையநேரியைச் சேர்ந்த மேளக்கலைஞர் மாடசாமி ஆகிய 6 பேரை அரிவாளால் வெட்டியது.

இதன்பின்னர் மண்டபத்துக்குள் புகுந்த அந்த கும்பல், அங்கிருந்த சேர்கள் மற்றும் பேனர்களை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி விட்டு பைக்கில் தப்பியது. செல்லும் வழியில் பலசரக்கு கடை உரிமையாளர் குழந்தைதெரசா என்பவரை மிரட்டி கடையை சூறையாடியது. பயங்கர தாக்குதலில் படுகாயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெட்டூரில் தாக்குதல் நடத்திய போதைக்கும்பல் நெல்லை மாவட்டம், மானூர் தெற்குபட்டி வழியாக பைக்கில் அதிவேகத்தில் சென்ற போது, தட்டிக்கேட்ட முபாரக் (30), அப்துல்ரஹூமான் (36) ஆகியோரையும் வெட்டி விட்டு தப்பியது. கொடூர தாக்குதல் நடத்திய 12 பேர் கும்பலை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி நெட்டூர் கிராம மக்கள் 6 மணி நேரம் சாலை மறியல் செய்தனர். தென்காசி எஸ்பி அசோக்குமார் பேச்சுவார்த்தைக்குப்பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, சோதனை சாவடிகளில் தீவிர சோதனை நடத்தினர். மேலும் மானூர் அருகே உகந்தான்பட்டி காட்டுப்பகுதியில் ட்ரோன் கேமரா, மோப்பநாய் உள்ளிட்ட நவீன உபகரணங்களை பயன்படுத்தி தேடுதல் வேட்டையில், முள்காட்டில் பதுங்கியிருந்த 3 சிறுவர்கள் மற்றும் நெட்டூரைச் சேர்ந்த இசக்கிமுத்து (19), மாரியப்பன் (20), பிரமுத்து (21), அம்பை பிரம்மதேசத்தைச் சேர்ந்த நவீன் (20), சஞ்சய் (20) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

3 இளஞ்சிறார்களை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும், மற்ற 5 பேரை பாளை மத்திய சிறையிலும் அடைத்தனர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வலைவீசி வந்தனர். தேடப்பட்ட 4 பேரில் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் ‘ரவுடி லிஸ்ட்டில்’ இடம் பெற்ற ஐயப்பன் (21) என்பவர், முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரம், அரசங்குளம் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரவுடி ஐயப்பன் மீது ஏற்கனவே ஆலங்குளம் காவல்நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உள்ளது.

இதையடுத்து நேற்று அதிகாலை தனிப்படை ஏட்டு முத்துக்குமார் மற்றும் போலீசார் அரசங்குளம் தாமிரபரணி ஆற்று பகுதிக்கு சென்று அங்கு பதுங்கியிருந்த ஐயப்பனை பிடிக்க முயற்சித்தனர். போலீசாரை பார்த்ததும் அவர் ஆற்றுக்குள் இறங்கி தப்ப முயன்றார். இருப்பினும் போலீசார் அவரை சுற்றிவளைத்தனர். அப்போது ஐயப்பன் அரிவாளால் ஏட்டு முத்துக்குமார், போலீஸ்காரர் பாலசுப்பிரமணியன் ஆகியோரை வெட்டி விட்டு தப்பமுயன்றார்.

இதையடுத்து போலீசார், தங்களது தற்காப்புக்காக ஐயப்பன் காலில் துப்பாக்கியால் சுட்டு அவரை பிடித்தனர். சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி மற்றும் தாக்குதலில் காயமடைந்த ஏட்டு முத்துக்குமார், போலீஸ்காரர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். எஸ்பி பிரசன்னகுமார், மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த போலீசாரிடம் நலம் விசாரித்தார்.

* மேலும் 2 பேர் கைது
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து பைக்குகளில் வந்த கும்பல், சாலையில் செல்வோரை வெட்டிய சம்பவத்தில் நேற்று மேலும் 2 பேரை நெல்லை போலீசார் கைது செய்தனர். பிரம்மதேசத்தை சேர்ந்த நாலாயிரம் என்ற எலி (20) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மருதுபாண்டி என்ற கைவரிசை பாண்டி (34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைவரிசை பாண்டி ரவுடி பட்டியலில் உள்ளதாக அம்பை போலீசார் தெரிவித்தனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* ரவுடி ஐயப்பன் மீது 7 வழக்குகள்
சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி ஐயப்பன் மீது ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இதுதவிர கொலை முயற்சி, வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

* தீவிர கண்காணிப்பு
அரிவாள் வெட்டில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் மானூர் காட்டுப்பகுதிகளான மதவக்குறிச்சி, ரஸ்தா, உகாந்தான்பட்டி மற்றும் சீதபற்பநல்லூர் ஆகிய ஊர்களில் பதுங்கியிருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மோப்பநாய், ட்ரோன் உதவியுடன் அவர்களை பிடிக்க தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் நெல்லை, தென்காசியில் உள்ள அனைத்து ‘செக் போஸ்ட்’ களிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Rowdy ,Nellai ,Tenkasi ,Nettur ,Alankulam ,Tenkasi district ,
× RELATED தமிழகம் முழுவதும் 68 சுங்கச்சாவடிகளில்...