ஸ்பிக்நகர்: தூத்துக்குடி அருகே நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தடுக்க முயன்ற மற்றொருவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இருவரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரம் மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் புலவர் கணேசன்(65). இவர், திரைப்பட நடிகை தீபாவின் தந்தை ஆவார். நேற்று மாலை முத்தையாபுரம் பல்க் பஜாரில் உள்ள டீக்கடை அருகே நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து புலவர் கணேசனை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவத்தை பார்த்த அருகில் இருந்த முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் தடுக்க முயன்றார். அவருக்கு கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
