தேனி: தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டியில் அரசுக்கு சொந்தமான சுமார் 109 ஏக்கர் நிலத்தை, கடந்த 2011-21ல் அதிமுக ஆட்சியின்போது, பெரியகுளம் ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த அன்னபிரகாஷ், உறவினர்கள் மற்றும் பலருக்கு அப்போதைய அதிகாரிகள் முறைகேடாக பட்டா மாறுதல் செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் தேனி குற்றப்பிரிவு போலீசார், அன்னப்பிரகாஷ் மற்றும் உறவினர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது மோசடி வழக்குபதிந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இவ்வழக்கில், அன்னபிரகாஷ் உள்ளிட்டோர் கைதாகினர். லஞ்ச ஒழிப்புத் துறையினரும் அன்னபிரகாஷ் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. ஜாமீனில் உள்ள அன்னபிரகாஷ், அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து நேற்று முன்தினம் தவெகவில் இணைந்தார். இதுகுறித்து தேனி அதிமுகவினர் சிலர் கூறுகையில், அன்னபிரகாஷ் மீதான நிலமோசடி, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சட்டத்தின் பிடியில் இருந்து தவெக மூலம் தப்பித்துக்கொள்ளும் எண்ணத்தில் இணைந்துள்ளார். ஊழல் வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள அன்னபிரகாஷை, அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இணைத்துள்ளார். இதன்மூலம் தவெக மிகப்பெரிய தீயசக்தி என்பதை நிரூபித்துள்ளது. இனிவரும் காலங்களில் அதிமுக சார்பில், அன்னபிரகாஷின் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்றனர்.
