×

போளூரில் ஆய்வு செய்தபோது கல்குவாரி ஊழியரை மிரட்டிய எம்எல்ஏ: வீடியோ வைரலால் நெட்டிசன்கள் வறுத்தெடுப்பு

சேத்துப்பட்டு: போளூரில் கல்குவாரி ஊழியரை தவெக எம்எல்ஏ மிட்டிய வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர், குன்னத்தூர் பகுதியில் அரசு அனுமதி பெற்று இயங்கி வரும் தனியார் கல்குவாரியில் போளூர் தொகுதி தவெக எம்எல்ஏ அபிஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சில தினங்களுக்கு முன்பு திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஊழியர் ஒருவரிடம் ஒரு காகிதத்தை கொடுத்து, அதை வாசிக்குமாறு எம்எல்ஏ கூறியுள்ளார்.

அந்த ஊழியர் இயல்பான தொனியில் நின்று கொண்டிருந்ததை கண்டு ஆத்திரமடைந்த எம்எல்ஏ அபிஷேக், அவரை அதிகார தொனியில் பேசி மிரட்டியுள்ளார். ‘இந்த நக்கல் புத்தியெல்லாம் இங்க வச்சுக்காதே! ஏன் ஒழுங்கா நிற்க மாட்டியா? சும்மா அமைதியா போறோம்னு இந்த மாதிரி நக்கல் பண்ணக் கூடாது. இங்க ஒழுங்கா வேலை செய்யணும்னு சொல்றதுக்குத்தான் வந்திருக்கேன். உன் வயது என்ன தம்பி? உன் வயதைத் தாண்டித்தான் நான் வந்திருக்கேன். பணிவா பேசினால்தான் வேலை நடக்கும். உன்னை யாரையும் கெஞ்ச சொல்லல…

ஆனா இந்த மாதிரி நக்கல் காட்டுறதெல்லாம் வேற எங்கயாவது வச்சுக்கோ’ என்று அதிகாரத் தோரணையில் பேசி உள்ளார். மேலும் அங்கிருந்த பெரியவர்களிடம், ‘உங்க பசங்களுக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுக்க மாட்டீங்களா?’ என்றும் கத்தி உள்ளார். இந்த மிரட்டல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பெரும் அதிர்வலையையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து வரும் பொதுமக்கள், தவெக எம்எல்ஏவின் இந்த செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

எம்எல்ஏ முன்னாடி கைகளைக் கட்டி, வாயை பொத்திக்கொண்டுதான் நிற்க வேண்டுமா? சிரிக்க கூட உரிமையற்ற அடிமைகளா மக்கள்? அங்கு ஏதேனும் தவறு நடந்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். அதை விடுத்து, சாமானிய மக்களை மிரட்டுவதற்கு எந்தவொரு அதிகாரத்தையும் இந்திய அரசியலமைப்பு சட்டம் உங்களுக்கு வழங்கவில்லை. மக்கள்தான் இந்நாட்டின் எஜமானர்கள். நீங்கள் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஊழியர் மட்டுமே என்பதை மறந்துவிடாதீர்கள் என்று நெட்டிசன்கள் தவெக எம்எல்ஏவிற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

எம்எல்ஏ அபிஷேக், ‘ஆய்வு’ என்ற பெயரில் தனது ஆதரவாளர்களுடன் ஆங்காங்கே சென்று, அரசு அதிகாரிகளையும், தனியார் நிறுவன ஊழியர்களையும் அதட்டி மிரட்டி வருவதாக பரவலான புகார்கள் எழுந்துள்ளன. எம்எல்ஏவின் இந்த அராஜக போக்கினால் அரசு அதிகாரிகள் வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அரசு அனுமதியுடன் நடக்கும் குவாரிகளுக்கு சென்று, சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு மிரட்டுவதன் பின்னணியில், ‘மாமூல்’ வாங்கும் நோக்கம் ஏதேனும் உள்ளதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் முணுமுணுக்கின்றனர்.

Tags : Polur ,Chettupattu ,Thaveka MLA ,Abhishek ,
× RELATED தமிழகம் முழுவதும் 68 சுங்கச்சாவடிகளில்...