சென்னை: ஆனைமங்கலம் செப்பேடுகளை விரைவில் தமிழ்நாடு கொண்டுவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். பிரதமரின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் 134வது நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியை சென்னை கோயம்பேட்டில் உள்ள இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பொதுமக்களோடு இணைந்து கேட்டார். தொடர்ந்து எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்து நாட்டுக்குச் சென்றிருந்த போது, சோழர் காலத்து சிறப்பு வாய்ந்த ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்து நாட்டிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டன. அவை விரைவில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அண்மையில் நமது 100 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர்கள் குரிந்தர்வீர் சிங் மற்றும் அனிமேஷ் குஜூர் ஆகியோரின் மகத்தான சாதனையை பிரதமர் பாராட்டியதுடன் மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாடினார்.
இதேபோல், நாகர்கோவிலைச் சேர்ந்த கிரிஜா அம்மா தாம் அண்மையில் சந்தித்ததையும் பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தாங்கள் சிறுகச் சிறுகச் சேமித்த 40 லட்சம் ரூபாயைப் பிரதமரிடம் நன்கொடையாக வழங்கியதையும் அவர் நாட்டு மக்களுக்குத் தெரிவித்தார்.
இதுபோன்று நாடெங்கிலும் பல்வேறு எளிய மக்கள் மேற்கொள்ளும் அளப்பரிய சமூக சேவைப் பணிகளைப் பிரதமர் தமது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் மூலம் நாடறியச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதன் மூலம் அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற இது வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
