சென்னை: திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசி களங்கப்படுத்துவதா என்று அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கவர்னர் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவள்ளுவர் புகைப்படத்திற்கு கவர்னர் அர்லேகர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதற்காக வைக்கப்பட்டு இருந்த திருவள்ளுவர் படத்திற்கு காவி உடை அணிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு: பழைய ஆளுநரை போல, தற்போதைய ஆளுநர் ராஜேந்திர அர்லேகரும் திருவள்ளுவருக்கு ‘காவி’ பூசி, அவரை களங்கப்படுத்தும் வேலையை மேற்கொண்டுள்ளார். ஆளுநரின் தமிழர் விரோத செயல்கள் கண்டிக்கத்தக்கது. ஆளுநர் அர்லேகர் தமது ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, அம்பேத்கர் வகுத்தளித்த அரசமைப்பு சட்டத்தை நிலைநிறுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்: திருவள்ளுவர் உலகப் பொதுமறை தந்தவர். அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளோ அல்லது குறிப்பிட்ட அடையாளத்திற்குள்ளோ சுருக்குவது என்பது உலகளாவிய அவரது சிந்தனைகளை சிறுமைப்படுத்துவதற்குச் சமம். . திருவள்ளுவர் எந்தவொரு மதத்திற்கும், சாதிக்கும், இனத்திற்கும், நாட்டிற்கும் தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை. அவரது ‘திருக்குறள்’ மனித குலம் முழுமைக்கும் பொதுவான வாழ்வியல் நெறிகளைப் பேசுகிறது.
கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் கூட அவர் ‘ஆதி பகவன்’, ‘மலர்மிசை ஏகினான்’, ‘அறவாழி அந்தணன்’ என்று பொதுவான சொற்களையே பயன்படுத்தினாரே தவிர, எந்தவொரு குறிப்பிட்ட மதக் கடவுளின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. அவரே தன்னை ஒரு பொதுவானவராக நிலைநிறுத்தும்போது, அவருக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படும் வண்ணத்தைப் பூசுவது அவரது உலகளாவிய தத்துவத்திற்கு முரணானது. வள்ளுவர் நமக்குக் கற்றுக்கொடுத்தது \\”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்\\” என்ற சமத்துவத்தை தான்.
வள்ளுவரை ஒரு குறிப்பிட்ட வண்ணத்திற்குள் அடைக்க நினைப்பது கடலை ஒரு குடத்திற்குள் அடைக்க நினைப்பதற்குச் சமம். அவர் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டும் ஒரு பேரொளி. அவருக்குக் காவி பூசுவதும், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதும் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. அவரது உடைகளின் நிறத்தை மாற்றுவதை விடுத்து, அவரது குறள் காட்டும் நல்வழியில் நடக்க முயல்வதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை. வள்ளுவரை களங்கப்படுத்தாதீர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* விஜய்யின் நண்பரான அமைச்சர் ஸ்ரீநாத் மழுப்பல் பதில்
ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று முதல்வர் விஜய்யின் நண்பரான மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம், ‘கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசப்பட்டுள்ளதே..’ என்று ஒரு நிருபர் கேள்வி கேட்டார். இதனால் தர்மசங்கடத்தில் நெளிந்த அமைச்சர், ‘‘அதைப்பத்தி இப்ப பேச வேணாம்..அப்புறம் பேசலாம்..’’ என மழுப்பலாக பதிலளித்து நழுவினார்.
