கல்வி அமைச்சருக்கு எதிரான பிரசாரத்தை தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் அனைத்து கணக்குகளும் முடக்கம்: ஒன்றிய அரசின் ஒடுக்குமுறை: நிறுவனர் அபிஜித் குற்றச்சாட்டு

 

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் சமீபத்திய விசாரணை ஒன்றில், ‘‘வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகளைப் போல மாறி, மீடியா, சமூக ஊடகவியலாளர்கள், தகவல் அறியும் ஆர்வலர்களாகி எல்லாரையும் தாக்குகிறார்கள்’’ என்றார். இது சர்ச்சையான நிலையில், இணையத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) என்ற நையாண்டி குழு தொடங்கப்பட்டது. அரசியல் வியூக நிபுணரும், பாஸ்டன் பல்கலைக்கழக மாணவருமான அபிஜித் திப்கே நிறுவிய இந்த கட்சிக்கு இணையத்தில் பெருகும் ஆதரவு பெருகிறது.

நையாண்டி கட்சியான சிஜேபிக்கு கோடிக்கணக்கான இளைஞர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் இக்கட்சியில் இணைந்தவர்கள் எண்ணிக்கை பாஜ, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை விட அதிகரித்தது. இது உலகம் முழுவதும் பேசு பொருளானது. கரப்பான் பூச்சி கட்சியின் சமூக ஊடகங்களில் மக்கள் பிரச்னைகளும், அரசுக்கு எதிரான பதிவுகளும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தன.

குறிப்பாக, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவும் பிரசாரம் செய்யப்பட்டது. இந்நிலையில், கரப்பான் பூச்சி கட்சியின் அனைத்து கணக்குகளும் முடக்கப்பட்டதாக அதன் நிறுவனர் அபிஜித் திப்கே நேற்று கூறி உள்ளார். சிஜேபியின் எக்ஸ் கணக்கு கடந்த வியாழக்கிழமை முடக்கப்பட்டதால், கரப்பான் பூச்சி திரும்ப மீண்டும் வந்து விட்டது என புதிய கணக்கு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது அனைத்து கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அபிஜித் திப்கே எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மீது ஒட்டுமொத்த ஒடுக்குமுறையும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. எனது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. மாற்று கணக்கும் (கரப்பான் பூச்சி மீண்டும் வந்து விட்டது) நீக்கப்பட்டு விட்டது.

சிஜேபியின் இணையதளமும் முடக்கப்பட்டு அணுக முடியாத நிலையில் உள்ளது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் புதிய இந்தியாவில் பொறுப்புடைமையை கோரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மீதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது எங்கள் தளங்கள் எதையும் அணுகும் வசதி எங்களிடம் இல்லை. இதற்குப் பிறகு வெளியாகும் எந்தவொரு பதிவையும், கரப்பான்பூச்சி கட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கையாகக் கருதக்கூடாது’’ என கூறி உள்ளார். ஏற்கனவே கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிரான பிரசாரத்தால் தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக அதன் ஸ்கிரீன் சாட்களை அபிஜித் திப்கே சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேற்று காலை 6.50 மணிக்கு, சிஜேபி கட்சியின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ‘‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எந்த போராட்ட அழைப்பையும் விடுக்கவில்லை. இந்த முழு இயக்கத்தையும் ஆபத்தானதாக சித்தரிப்பதற்காக அரசு சிறிய அசம்பாவிதத்திற்காகக் காத்திருக்கிறது. அனைத்து கரப்பான்பூச்சிகளும் அமைதியாகவும் கவனமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என கூறப்பட்டிருந்தது.

Related Stories: