சென்னை: தேர்தல் பணத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை விசாரிக்க தமிழக காங்கிரசில் 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை கட்சி தலைமை அறிவித்துள்ளது. 60 நாளில் மேலிடத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் போட்டியிட்டது. 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. படுதோல்வியை சந்தித்த நிலையில், தோல்விக்கான காரணம் குறித்து விசாரிக்க 28 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு கடந்த வாரம் அழைக்கப்பட்டனர். அவர்களிடம் மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், நிவேதித் ஆல்வா உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.
அப்போது, புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் பலரது மீது சரமாரியாக வேட்பாளர்கள் புகார்களை அள்ளி வீசினர். தங்களுக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும், கூட்டணி வேட்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு தங்கள் தொகுதி பக்கமே பல மாவட்ட தலைவர்கள் தலை காட்டவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.
அதே நேரம், வேட்பாளர்கள் பலரும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் யாரையும் கண்டுகொள்ளாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்டது குறித்தும் மேலிட பொறுப்பாளர்கள், காங்கிரஸ் வேட்பாளர்கள் பலருக்கு செம டோஸ் விட்ட சம்பவம் தமிழக காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தேர்தல் செலவுக்காக கட்சி தலைமை கொடுத்த பணத்தை முறையாக பயன்படுத்தாமல் ஆட்டையை போட்டது குறித்தும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
இதற்கிடையே, கூட்டணி கட்சியினர் தேர்தல் செலவுக்காக வழங்கிய பணத்தை தேர்தல் பணிகளுக்காக செலவிடாமல் ஊழல் செய்தவர்கள் குறித்தும், சரியாக தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் பணத்ைத மட்டும் பெற்றுக் கொண்டு தலைமறைவானவர்கள் குறித்தும் ஏராளமான புகார்கள் டெல்லி தலைமைக்கு வந்த வண்ணம் இருந்தன. மேலும், கட்சிக்காக உழைப்பவர்களை ஒதுக்கி விட்டு தங்களுக்கு வேண்டியவர்களை தேர்தல் பணிக்குழுவில் சேர்த்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்தும் புகார்கள் மேலிடத்துக்கு சென்றுள்ளது.
இப்படி தேர்தல் செலவுக்காக கட்சி தலைமை வழங்கிய மொத்த பணத்தில் நடந்த ஊழல்கள் குறித்தும் விலா வாரியாக டெல்லிக்கு புகார்கள் சென்றுள்ளது. இதை உடனடியாக விசாரித்து அறிக்கை அளிக்கும்படி டெல்லி தலைமை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முறைகேடுகள் மற்றும் கட்சி விரோத நடவடிக்கை ஆகியவற்றை விசாரிக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழகத்தில் 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அறிவித்துள்ளது.
இந்த குழு, முன்னாள் எம்பி ஜெயக்குமார் தலைமையில் செயல்பட உள்ளது. இதாயதுல்லா ஒருங்கிணைப்பாளராகவும், சொர்ணா சேதுராமன், சி.டி.மெய்யப்பன், காமலட்சுமி காமராஜ் ஆகியோர் உறுப்பினர்கள் என மொத்தம் 5 பேர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உண்மையை ஆய்வு செய்ய உள்ளது. இதற்கான அறிக்கையை அடுத்த 60 நாட்களுக்குள் தயார் செய்து டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு அளிக்க உள்ளது. இந்த குழு வரும் 20ம்தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல உள்ளனர்.
உண்மை கண்டறியும் குழு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செல்லும் போது, முக்கிய தலைவர்கள், மூத்த நிர்வாகிகள், வேட்பாளர்கள் முதல் யார் யார் என்னென்ன முறைகேட்டில் ஈடுபட்டார்கள், கட்சி வழங்கிய பணத்தில் நடந்த ஊழல்கள் உள்ளிட்வைகள் குறித்து விலா வாரியாக தெரிவிக்க காங்கிரசார் தயாராகி வருவது தமிழக காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேர்தல் பணத்தில் கை வைத்த ‘கை’ நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
