பெட்ரோல் விலை உயர்வு: தவணை முறையில் பாஜ அரசு கொள்ளை: கார்கே விளாசல்

 

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பாஜ அரசு மக்களின் வருவாயை தவணை முறையில் கொள்ளையடித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம்சாட்டினார். காங்கிரஸ் தலைவர் கார்கே எக்ஸ் தளத்தில் நேற்று கூறியிருப்பதாவது: பெட்ரோல், டீசல் மீது தினமும் ரூ.1000 கோடி மத்திய வரியாக விதித்த பிறகும் பாஜவின் பேராசை தீரவில்லை.

சர்வதேச சந்தையில் விலை குறைவாக இருந்த போது அந்த பலனை மக்களுக்கு வழங்காமல் ஈவு இரக்கமின்றி கொள்ளையடித்தார்கள். இப்போது நெருக்கடிக்குப் பிறகு, தேர்தல் பணியில் மும்முரமாக இருந்த பாஜ தலைமை, தேர்தல் முடிந்த பிறகு தியாகம் செய்யுமாறு மக்களுக்கு போதனை செய்தது.

இப்போது 8 நாட்களில் 3வது முறையாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி விட்டார்கள். மக்களின் வருவாயை தவணை முறையில் கொள்ளையடிக்கிறார்கள். மேற்கு ஆசியாவில் போர் மூண்ட போது பிரதமர் மோடி எல்லாம் சரியாக இருக்கிறது என்ற மாயையை மக்களுக்கு ஊட்டினார். இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற மற்ற நாடுகளோ கலால் வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் அளித்து வந்தன.

தவணை முறையில் நடைபெறும் இந்த கொள்ளையில் யாருக்கெல்லாம் பங்கு கிடைக்கிறது? ஏன் நீங்கள் இவ்வளவு சமரசத்திற்கு ஆளாகி விட்டீர்கள் என்பதற்கு மோடி பதிலளிக்க வேண்டும். இந்த அரசாங்கத்தில் உண்மையான நெருடிக்கடி என்பதை பாஜவின் தலைமைத்துவம் தான் என்பதை மக்கள் இப்போது உணர்ந்து விட்டனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: