புதுடெல்லி: சிறுவர்கள் கடத்தல் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் பிறப்பித்த உத்தரவில், ”காணாமல் போகும் சிறுவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவது மிகவும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. பல ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாத சிறுவர்களின் எண்ணிக்கை என்பது 47ஆயிரம் வரை உள்ளதாக புள்ளியல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தேசிய குற்ற ஆவண கணக்குகள் படி வெளியான தகவல்கள் ஆகும். பல சம்பவங்களில் காவல் நிலையங்கள் வழக்குபதிவு செய்வதில்லை. தேடிவருகிறோம் என்று இழுத்தடிக்கப்படுவதாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் புகாராகவே தெரிவிக்கின்றனர். மேலும் சிறுவர்கள் காணாமல் போன புகார் வந்தால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை தொடங்க வேண்டும். இதனை நடைமுறைப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவாக பிறப்பிக்கப்படுகிறது.
மேலும் காணாமல் போன குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் தொடர்பான முக்கிய வழக்குகளை கையாள தேசிய அளவில் இணைய தளம் உருவாக்க வேண்டும். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக அனைத்து மாநிலங்களிலும் ஆட்கடத்தல் பிரிவுகள் உரிய முறையில் செயல்படுகிறதா என்பதை காவல்துறை தலைவர்கள் கண்காணிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
