புதுடெல்லி: ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில், 51,000க்கும் மேற்பட்டோருக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார். நாடு முழுவதும், ஒன்றிய அரசு பணியில் தேர்வானவர்களுக்கு ரோஜ்கர் மேளா நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறார். இதுவரை நடத்தப்பட்ட 18 நிகழ்ச்சியில் சுமார் 12 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் 47 இடங்களில் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த ரோஜ்கர் மேளாவில், 51,000க்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் மோடி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: இன்று நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள். 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அரசு பணிகளுக்கான நியமன ஆணைகளைப் பெற்றுள்ளனர். இந்த இளைஞர்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்காளிகளாக இணைந்துள்ளனர். இந்த இளைஞர்கள் ரயில்வே, வங்கி, பாதுகாப்பு, கல்வி மற்றும் பல துறைகளில் புதிய பொறுப்புகளை ஏற்க தயாராக உள்ளனர்.
வரும் ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைக்கும் லட்சியத்தை நிறைவேற்றுவதில் நீங்கள் அனைவரும் முக்கிய பங்காற்ற உள்ளீர்கள். இந்த சாதனைக்காக உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியானது, இளைஞர் சக்திக்கு அதிகாரம் அளிப்பதில் எங்கள் அரசுக்கு உள்ள அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
* இளைஞர் நலனுக்காக சர்வதேச ஒப்பந்தங்கள்
சமீபத்தில், ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகள் சுற்றுப்பயணத்தில் பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, ‘‘இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் உலகமும் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறது. இந்தியாவின் சர்வதேச ஒப்பந்தங்கள் நம் இளைஞர்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்திய இளைஞர்கள் வேலைவாய்ப்புகளையும், உலகளாவிய அனுபவத்தையும் பெறுவதே இதன் நோக்கம்’’ என்றார்.
