கலைக்கூடம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

நன்றி குங்குமம் தோழி

கோடை விடுமுறை என்றாலே ஊரில் உள்ள தாத்தா, பாட்டி வீடுதான். அங்கு சென்றாலும் விடுமுறையாக மட்டுமல்லாமல் வாழ்வியல் பாடமாக இருக்கும். கதைகள், பாரம்பரிய விளையாட்டுகள், உறவுகளின் முக்கியத்துவம், இயற்கையோடு இயைந்த வாழ்வு என அர்த்தமுள்ள மகிழ்ச்சியான நாட்களாக இருக்கும். இன்று மின்னணு உலகில் வளரும் குழந்தைகளுக்கு இதுபோன்ற அனுபவங்கள் கிடைப்பதில்லை. மீண்டும் அந்தப் பொற்காலத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் கடமையை செய்து வருகிறது ‘கலைக்கூடம்’ (Kalaikoodam Art Village). கோவையில் பரபரப்பான நகர வாழ்க்கைக்கு மத்தியில், பல்லடம் அருகில், புளியம்பட்டியில் அமைதியான சூழலில் இயங்கி வரும் இதனை ஜெனிடா மற்றும் ஹரிதா இரு தோழிகள் ஆரம்பித்துள்ளனர். இன்றைய குழந்தைகளுக்கு பாரம்பரிய கலைகளையும், வாழ்க்கைத் திறன்களை கற்றுக்கொடுக்கும் ஒரு முக்கிய மையமாக விளங்குகிறது.

“குழந்தைகளுக்கு கிராமப்புற வாழ்க்கையில் உள்ள சந்தோஷங்களையும் வாழ்க்கை அனுபவங்களையும் கொடுக்க வேண்டும். நெருக்கமான சமூகங்கள், இயற்கை சூழல், விவசாயம் போன்றவை நிறைந்த ஒரு அழகான அமைதியான வாழ்வினை அவர்களுக்கு காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் தொடங்கியதுதான் இந்தப் பயணம்” என பேசத் தொடங்கினார் ஜெனிடா. “நான் உளவியல் ஆலோசகர்.

குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் மன ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக செயல்படக்கூடிய ஒரு இடமாக ‘தி ப்ரீதிங் ஸ்பேஸ்’ என்பதை நடத்தி வந்தேன். இதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு இயற்கை சூழல் நிறைந்த அனுபவங்களை கொடுக்க நினைத்தேன். ஹரிதா என் வீட்டின் கட்டிட கலைஞராக அறிமுகமானார். இங்கிருந்துதான் எங்க நட்பு தொடங்கியது. ஹரிதாவும் கலையில் ஆர்வமிக்கவர். எங்கள் இருவரின் எண்ணமும் ஒன்றிப்போனது. எங்க கனவின் ஒரு தொடக்கமாக ‘வயல்வெளி’ எனும் ஒரு நாள் நிகழ்ச்சியினை நடத்தினோம்.

குழந்தைகள் வீட்டுக்குள்ளே இருந்து ஃபோன், டேப்லெட் போன்ற டிஜிட்டல் சாதனங்களிலேயே முடங்கிப் போகாமல், அவர்கள் வெளியில் வந்து, மண்ணில் நடந்து, விவசாய நிலங்கள் மற்றும் வேலைகளை பார்க்க வேண்டும். அவர்களை இயற்கை சூழலில் மகிழ்விக்க வேண்டும் எனும் நோக்கில் இதை நடத்தினோம். குழந்தைகள் செருப்பு இல்லாமல் மண்ணில் நடக்கவும், தொடவுமே தயங்கினார்கள். ஆனால், அடுத்த சில மணிநேரங்களிலேயே அதற்கு பழகியவர்கள் அதை விட்டு வர மனமில்லாமல் விளையாட தொடங்கினார்கள்.

குழந்தைகள் அறிந்திடாத பல கிராமப்புற விஷயங்களை ஒரே நாளில் தொகுத்து கொடுத்தபோது அவர்களுக்கு புதுவித அனுபவமாக இருந்தது. இந்த ஒரு நாளில் குழந்தைகள் மற்றும் பெற்றோரிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதேபோல குழந்தைகள் கிராமப்புற இயற்கை சூழல்களை அனுபவிக்கவும், பாரம்பரியம், கலையில் ஆர்வமுடன் இருக்கவும் அவர்களுக்கான ஒரு இடத்தை அமைக்கலாம் என்கிற முயற்சியில் அமைக்கப்பட்டதுதான் கலைக்கூடம்” என்றவரை தொடர்ந்தார் ஹரிதா.

“புளியம்பட்டி கிராமத்தில் சுற்றிலும் எல்லா இயற்கை சூழலையும் இணைக்கக்கூடிய ஒரு இடத்தினை தேர்ந்தெடுத்து, அதனை அழகான ‘கலைக்கூடமாக’ மாற்றியமைத்தோம். நகரத்தின் சத்தமில்லாத, அமைதியான கிராமப்புறச் சூழலில் குழந்தைகள் தங்களைச் சுயமாக ஒழுங்குபடுத்திக் கொள்ளவும் கலை மற்றும் வாழ்வின் சில தருணங்களை ஆழமாக அனுபவிக்கும் ஒரு இடமாக ‘கலைக்கூடம்’ திகழ்கிறது. குழந்தைகளை ஈடுபடுத்துவதன் எங்களின் அடுத்த முயற்சியாக ‘சந்தை’ எனும் ஒருநாள் நிகழ்ச்சியை நடத்தினோம்.

விவசாயம் எவ்வாறு நடக்கிறது, அறுவடை காலம், விவசாயத்தின் முக்கியத்துவம், விவசாயிகளின் உழைப்பு போன்றவற்றை கற்பித்து, அவர்களை நேரடியாக விவசாய நிலங்களில் கூட்டிச்சென்று எல்லாவற்றையும் விளக்கினோம். பின்னர் அவர்களுக்கு ‘சந்தை’ எனும் பெயரில் காய்கறி கடை அமைத்து அவர்களே மக்களுடன் பேசி விற்பனை செய்தனர். இதில் பல கற்றல் செயல்பாடுகளும் உள்ளடங்கியிருந்தன.குழந்தைகள் பலருக்கும் காய்கறிகளின் பெயர்கள் குறிப்பாக தமிழில் தெரியவில்லை. அதனை அங்கு கற்றுக் கொடுத்தோம். நம் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை உணர்த்தும் விதமாக குழந்தைகளுக்கு ‘விருந்தோம்பல்’ எனும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தோம்.

வீட்டிற்கு வருகிறவர்களை எவ்வாறு உபசரிக்க வேண்டும், உணவுப் பரிமாற வேண்டும் போன்ற நம் பண்பாடு சார்ந்த விஷயங்களை கற்றுக்கொடுத்தோம். அடுப்பில்லா சமையல் முறையில் குழந்தைகளின் ஈடுபாட்டுடன் உணவுகளை தயார் செய்தோம். அவர்களுக்குள்ளாகவே விருந்தினர்களாகவும் உபசரிப்பவர்களாகவும் செயல்பட்டனர். இலை போடுவது, தண்ணீர் வைப்பது, உணவு பரிமாறுவது போன்றவையும் உணவை வீணாகாமல் சாப்பிடுவது, சாப்பிட்டவுடன் இலையை அவர்களே மூடி வைப்பது போன்ற பழக்கங்களையும் கற்றுக்கொண்டனர்” என்றார்.

குழந்தைகளின் விடுமுறை நாட்கள் அர்த்தமுள்ளதாகவும் கலை மற்றும் இயற்கையுடன் இயைந்த வாழ்வில் கிடைக்கும் அடிப்படை வாழ்க்கை திறன்களை கற்கவும் இவர்களின் அடுத்த முயற்சி குறித்து ஜெனிடா விளக்குகையில், “வாரம் முழுக்க பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளாகவே நிகழும் அன்றாட சுழற்சியை தவிர்த்து பெரிய வட்டத்தில் பழகுவதற்கான தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது.

எனவே, குழந்தைகள் வார இறுதி நாட்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவும், வாழ்க்கைத் திறன் அடங்கிய கலைகளை கற்றுக்கொள்ள ‘கலைக்கூடம் ஆர்ட் வில்லேஜ்’ என்பதை தொடங்கினோம். ஒவ்வொரு வாரமும் கலைக்கூடத்தில் கலை பயிற்சியுடன் சில செயல்பாடுகள் நடைபெறும். கைவினைகள் அழியக்கூடாது… அதனை ஆதரிக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்த உள்ளூர் கைவினைக் கலைஞர்களை கொண்டு கூடைப் பின்னுதல், எம்ப்ராய்டரி, பூக்கூடை தயாரித்தல், களிமண் பொருட்கள் தயாரித்தல் போன்றவை கற்பிக்கப்படுகிறது.

இயந்திரங்களால் தயாரிக்கும் பொருட்களை யாராலும் செய்திட முடியும். ஆனால், சில விஷயங்களில் கலைஞர்களுக்கு மாற்று கொண்டுவர முடியாது என்பதை உணர்ந்து கொண்டனர். கூட்டாஞ்சோறு செய்வது, கோலமிடுவது, நீர் இறைப்பது, நெசவாளர்களை சந்திப்பது போன்றவற்றிலும் குழந்தைகள் ஈடுபடுவார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் ‘கலைப் பயணம்’ எனும் பெயரில் சம்மர் கேம்ப் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் மண்பானை செய்தல், கூடைப்பின்னல், கையால் எம்ப்ராய்டரி செய்தல், சிறிய காய்கறி தோட்டம் அமைத்தல், அறுவடை செய்தல், மலர் கொத்து தயாரித்தல், பூ கட்டுதல், மாலை தொடுத்தல், மண்பானை சமையல், நாட்டுப்புற நாடகக்கலை, பாரம்பரிய விளையாட்டுகள் என ஒவ்வொரு நாளும் ஒரு கற்றல் இருக்கும். 12 முதல் 36 மாதங்கள் வரையிலான வயதுள்ள குழந்தைகளுக்கு ‘மழலை’ எனும் நிகழ்ச்சி அவ்வப்போது நடைபெறும். இதில் குழந்தைகளுடன் பெற்றோர்களும் இணைந்தே செயல்படுவார்கள் ” என்றவர், சிறிய நிகழ்வாக தொடங்கிய கலைக்கூடம் இன்று குழந்தைகள் பலரும் விரும்பும் இடமாக மாறியது குறித்து விளக்கினார்.

“எங்க இருவருக்கும் குழந்தைகள் உள்ளனர். எங்க குழந்தைகளுக்கு இப்படியான ஒரு சூழல் இருக்க வேண்டும் என்று இருவரும் ஆசைப்பட்டோம். அதற்கான முயற்சிதான் இன்று எல்லா குழந்தைகளுக்கும் அதே இனிமையான அனுபவத்தை கொடுக்கும் கலைக்கூடமாக மாறியிருக்கிறது. மிக எளிமையாக தொடங்கினோம். இன்று குழந்தைகளை ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் கலைக்கூடத்திற்கு அனுப்பும் பெற்றோர்கள் எல்லாம் வாய்மொழியாக கேட்டு வந்தவர்கள்தான். இதற்காக நாங்க பெரிதாக மார்க்கெட்டிங் ஏதும் செய்வதில்லை.

கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் இருந்து குழந்தைகள் இங்கு வருகின்றனர். தொலைவில் இருந்து வரும் குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து வந்து மீண்டும் அழைத்துப் போவது சிரமம் என்பதால், நாங்களே தனி வாகனம் வைத்து குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து வருகிறோம். கலைக்கூடம் குழந்தைகளிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பெற்றோர்கள் எங்களிடம் பகிரும்போது மகிழ்ச்சியாக இருக்கும். விருந்தோம்பல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவன் தன் வீட்டு செல்லப்பிராணிக்கு உணவு தயாரித்து இலை போட்டு விருந்தோம்பல் செய்ததாக பெற்றோர் ஒருவர் பகிர்ந்தார். சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு நம் பண்பாட்டு உணர்வு ஏற்பட்டுள்ளதை கண்டு நெகிழ்ந்தார்.

கலைக்கூடத்தில் வழங்கப்படும் உணவும் சத்தான காய்கறிகளுடன் கூடிய ஆரோக்கியமான உணவாக இருக்கும். குழந்தைகள் தரையில் சம்மணம் காலிட்டு அமர்ந்து உண்ணுவார்கள். அதை பார்க்கவே நிறைவாக இருக்கும். அதேபோல இங்கு குழந்தைகள் எல்லோருமே எல்லா செயல்பாடுகளிலும் ஈடுபாட்டுடன் இருப்பார்கள். ‘போர் அடிக்கிறது நான் வீட்டிற்கு போறேன்’ என்றோ, ‘மொபைல், டி.வி காட்டுங்க’ என்றோ கேட்பதில்லை. அவர்களின் கவனக்கூர்மையும் அதிகரித்துள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளை அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கையில் அடைக்காமல், குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது மண்ணில் விளையாடுவது, தரையில் நடப்பது போன்ற செயல்களில் ஈடுபடுத்த வேண்டும்” என்றார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

 

Related Stories: