சிறுகதை-வயிற்றில் பூச்சி

நன்றி குங்குமம் தோழி

வாசலுக்கும் உள்ளுக்கும் நடையாய் நடந்துகொண்டிருந்தார் குருக்கள் ராமநாதன். ஒரு இடத்தில் நிற்கவும் இல்லை நிற்கவும் பிடிக்கவில்லை. ஒரு தவறு செய்து விட்டோம் என்ற நினைப்பு. உள்ளே மனைவி பார்வதி எதையோ நினைத்துக்கொண்டு சமையல் செய்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் ஒரே பீதி. வேலையில் மனம் செல்லவில்லை.

பெற்றோருக்கு ஏதோ பிரச்னை என்று தெரிந்தது கௌரிக்கு. அவள் தன் ரூமில் உட்கார்ந்து கொண்டு இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு வயது 27. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. ஒண்ணும் சரியாக அமையவில்லை. பணம் தட்டுப்பாடும் ஒரு காரணம். நல்லதா அமைய வேண்டும் என்று பல ஜாதகங்களை தட்டிக் கழித்து விட்டார். இப்போது கல்யாணம் செய்தே ஆக வேண்டும் என்ற நிலை. திடீரென்று கௌரியின் அருகில் வந்தார் அப்பா ராமநாதன்.

‘அம்மாவுக்கு வயித்துல பூச்சி. ஒரே வலி. ராத்திரி பூராவும் தூங்கல. லேடி டாக்டரிடம் போய் வரோம். கதவை தாழ்ப்பாள் போட்டுக்க’ என்று சொல்லி விட்டு, மனைவியுடன் போய் விட்டார். இதுவரை ராமநாதன், கௌரியிடம் இத்தனை பணிவாகவும் கனிவாகவும் பேசியது இல்லை. அம்மாவும் போய் வருகிறேன் என்று கௌரியிடம் முகத்தைப் பார்க்காமலே சொல்லிவிட்டு போனாள். அதில் பதட்டமும் வெட்கமும் தெரிந்தது. கௌரி கதவை மூடிக் கொண்டு புத்தகம் படிக்க ஆரம்பித்துவிட்டாள்.

ராமநாதனின் இந்தப் பதட்டத்துக்கு என்ன காரணம் தெரியுமா? அவருக்கு வயது 52. மனைவி பார்வதிக்கு வயது 47. இதில் என்ன விஷயம் என்று கேட்கிறீர்களா? இப்போது பார்வதி முழுகாம மாசமா இருக்கா, அதுவும் மூண மாசம். இதை இருவருமே எதிர்பார்க்கவில்லை. வெளியே சொல்லவும் முடியல. சொல்லாமலும் இருக்கவும் முடியாது. வெட்கம், அவமானம் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து ஆட்டிப் படைத்தது. நேற்றே பார்வதிக்கு தலைசுற்றல், வாந்தி எல்லாம் ஆரம்பித்துவிட்டது. அப்போதே அவள் உறுதி செய்துவிட்டாள். இதை இந்த அக்ரகாரத்தில் உள்ளவா கேட்டா சிரிக்க மாட்டாளா! வயசுப் பெண்ணுக்கு கல்யாணம் பண்ண துப்பில்லை கிழவனுக்கு… இந்த வயசுல மன்மத லீலை கேட்குதா? வயசுப் பெண்ணை வீட்டுல வச்சிக்கிட்டு என்ன கன்றாவி இது? என்று கேட்க மாட்டாளா என்று ஒருபுறம் நினைத்தார்கள்.

சரி அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன். என் பெண்டாட்டி… என் சொந்த விஷயம்… அதைக் கேட்க இவா யாரு? என்று கேட்கலாம். ஆனா, அது நன்னாவா இருக்கும் என்றும் மனம் சொல்லியது. ஆனா, இதை கௌரியிடம் சொல்ல முடியுமா… சிரிக்க மாட்டாளா? நம்மை மதிப்பாளா?இத்தனை குழப்பத்தையும் வைத்துக்கொண்டுதான் ஆஸ்பத்திரிக்கு சென்றார்கள். டாக்டரும் அதையே உறுதி செய்துவிட்டார். ‘‘மாமி மூன்று மாசமா முழுகாம இருக்கேள். ரொம்ப வீக்கா வேற இருக்கேள். வயசு ஒரு பிரச்னை. கலைக்க எல்லாம் முடியாது. அப்படிக் கலைத்தால் அது ஆபத்தாக முடியும்’’ என்று ஒரே போடாக போட்டார். இருவரும் தலை குனிந்தவாறு வெளியே வந்தனர். வீட்டு வாசலில் கௌரி நின்று கொண்டிருந்தாள்.

‘‘என்னப்பா என்ன ஆச்சு?’’ என்று கரிசனத்துடன் கேட்டாள். ராமநாதனுக்கு எரிச்சல் ஏற்பட்டது. ‘‘உள்ளே வா சொல்றேன்’’னு வேகமாக உள்ளே போனார். பார்வதியும் தலையை குனிந்துகொண்டு கௌரியை பார்க்காமலே உள்ளே சென்றாள். சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்ட ராமநாதன், ‘‘ஒண்ணுமில்லை கௌரி, அம்மாவுக்கு வயித்துல பூச்சி. மருந்து சாப்பிட்டா சரியாய் போகும்னு டாக்டர் சொன்னார்’’ என்றார் பணிவோடு.

இரண்டு, மூன்று நாட்கள் வீடு நிசப்தமாக இருந்தது. யாரும் யாரோடும் முகம் கொடுத்து பேசவில்லை. அம்மாவும் அப்பாவும் அடிக்கடி மெல்லிய குரலில் பேசினர். இதை கௌரி ஊர்ந்து கவனித்தாள். அம்மாவுக்கு ஏதோ பிரச்னை என்று தெரிந்தது. ‘ஆண்டவா அம்மாவை காப்பாத்து’ என காளீஸ்வரியை வேண்டினாள். அதுதான் அவர்களின் குலதெய்வம்.

ஒருநாள் வீட்டில் கௌரி இல்லை. கோயிலுக்குச் சென்றிருந்தாள். ராமநாதனும் பார்வதியும் தனியே இருந்தனர். ‘‘இதோ பார் பார்வதி… இப்போது நாம் ஒன்றும் செய்ய முடியாது. கௌரியை வீட்டில் வைத்துக்கொண்டு நாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? ஊர் சிரிக்காதா! உன்னை மாதிரி எனக்கும் வெட்கமாகத்தான் இருக்கு. என்ன செய்யறது. இதுக்கு ஒரே வழி கௌரிக்கு சீக்கிரம் கல்யாணம் செய்துவிடலாம். கல்யாணம் ஆயிட்டா யார் என்ன பேச முடியும். சில வரன்கள் கையில இருக்கு. அதை ஏற்பாடு செய்யறேன். கௌரி வந்ததும் அவகிட்ட பேசறேன்’’ என்றதும் அதை பார்வதி ஏற்றாள்.

கௌரி கோயிலிலிருந்து வந்தாள். அவளிடம் ராமநாதன் முகத்தைப் பார்க்காமலேயே பேசினார். ‘‘அம்மா கௌரி, எனக்கு வயசாயிண்டே இருக்கு. உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணணும். அம்மாவுக்கு வயித்துல ஏதோ பிரச்னை. நாலைந்து மாதத்திற்குள் அதைப் பார்க்கணும். நீ என்ன சொல்ற’’ என்று பயத்தோடு கேட்டார். ‘‘சரிப்பா உங்க இஷ்டம். ஆனா, பணம் இருக்கா’’
என்றாள் கௌரி.‘‘நீ ஒரு வார்த்தை சொல்லு, நான் பார்த்துக்கிறேன். என்னிக்கும் கடன் வாங்கித்தானே பண்ணப்போறோம்.

அதை இப்போதே செய்தால் என்ன’’ என்றார் ராமநாதன். ‘‘சரி’’ என்று ஒப்புக் கொண்டாள் கௌரி. ‘‘போன மாசம் உன்னை வந்து பார்த்த மாப்பிள்ளை சேதுராமனை ஞாபகம் இருக்கா? நல்ல பையன். வேலையும் நல்லதுதான். ஆனால், சொத்து பத்து என்று பெரிசாய் ஒன்றும் கிடையாது. குடும்பம் மிக நல்லது. ஒரே பையன். அப்பா பென்ஷனர். அவா அப்பவே ஒத்துண்டா. நாமதான் வேண்டாம்னு தள்ளிப்போட்டோம். அவா ரெடியா இருக்கா. நான் போய் பேசவா’’ என்றார். பெண் பார்க்க வரும்போது அவனை பிடித்துவிட்டது கௌரிக்கும். ‘‘சரி’’ என்றாள் மகிழ்ச்சியுடன்.

மறுநாள் பார்வதியும் ராமநாதனும் அவங்க வீட்டுக்குப் போய் பேசி முடித்து கல்யாண நாள் கூட குறித்துவிட்டார்கள். இருவரும் கல்யாண வேலைகளை மிக உற்சாகமாக ஆரம்பித்துவிட்டார்கள். பஞ்சாயத்துத் தலைவர் முதல் உள்ளூர் பெட்டிக் கடைக்காரர் வரை எல்லோரிடமும் கடன் வாங்கினார். கௌரி அடிக்கடி சிரித்துக்கொண்டாள். ஆனால், அம்மா மட்டும் அவள் அருகில் வரவில்லை. தள்ளியே நின்றாள். கல்யாண நாள் வந்தது. சுமாரான கூட்டம். வந்தவர்கள் எல்லோரும் பார்வதியின் வயிற்றைப் பற்றியே கேட்டார்கள். அப்பாவும் எல்லோரிடமும் ‘‘வயிற்றிலே பூச்சி’’ என்று சொல்லி வந்தார்.

கல்யாணம் நல்லபடியே முடிந்தது. தாலி கட்டியதும் ராமநாதனும் பார்வதியும் ஒரு மூலையில் நின்று கொண்டு அழுதனர். மறுநாள் மாப்பிள்ளை வீட்டார் கிளம்பும் நேரம். கௌரி தனியாக நின்றுகொண்டிருந்தாள். ராமநாதனும் பார்வதியும் அவள் அருகில் வந்தனர். பார்வதி தன் மகளின் கையைப் பிடித்துக் கொண்டு ‘‘அம்மா கௌரி… எங்கள் மேல உனக்கு கோபமா. அவசரம் அவசரமா கல்யாணம் பண்ணிட்டோம் என்று நினைப்பா. எங்களுக்கு வேறு வழி தெரியல. எனக்கு வேறு உடம்பு சரியில்லை.

அதனாலதான் இப்படி… என்னை மன்னிச்சுடு’’ என்று சொல்லி அழுதாள். ‘‘அதனால் என்னம்மா… அவர் நல்லவர். அதுவே போதும்’’ என்றாள் கௌரி. ‘‘உங்கள் பிரச்னையை நேற்றிரவே அவரிடம் சொல்லிவிட்டேன். அவரும் பணம் தரேன் என்றார். பணத்தைப் பற்றி கவலை வேண்டாம்’’ என்றாள் கௌரி. ‘‘அப்பா, அம்மாவின் வயிற்றில் உள்ள பூச்சியை பார்த்துக்கோங்கோ… அதுதான் முக்கியம். உடம்பு முக்கியம் இல்லையா’’ என்றாள் பொறுப்புடன். வண்டி கிளம்பிப் போனது.

தன் பெண்ணுக்கு இந்த விஷயம் தெரியுமோ தெரியாதோ என்றே தெரியவில்லை இவர்களுக்கு. ஆனால், அவள் பொறுப்புடன் பேசியது இவர்களுக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது. அப்படியே அவளுக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தாலும் அவள் அதை வெளிக்காட்டாமல் நாகரீகமாக இருந்தாள் என்பதை நினைக்கும்போது மகளைப் பற்றிய உயர்வான எண்ணம் வந்தது. அவளை நினைத்துப் பெருமைப்பட்டனர்.

அங்கே வண்டியில் கௌரி போன வாரம் நடந்ததை எண்ணி சிரித்துக் கொண்டிருந்தாள். அன்று ஒருநாள் கோயிலுக்குப் போனபோது அப்பா, அம்மா போன ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் நர்ஸை பார்த்தாள். அவள் இவளது பள்ளித் தோழி. அவள் இவளிடம் இவள் அம்மாவைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். ஆனால், கௌரி தன் அம்மாவுக்கு தர்மசங்கடம் வேண்டாம் என்று தனக்கு எதுவும் தெரியாதது போல மறைத்துவிட்டாள்.

தொகுப்பு: ஆர்.சேஷாத்ரி

Related Stories: