அரசியலற்ற அரசியல்!

நன்றி குங்குமம் தோழி

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வழக்கமான தேர்தல்களை போன்றதில்லை என்பதை முடிவுகள் நமக்கு உணர்த்தின. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இரு திராவிட கட்சிகளின் ஆதிக்கம் தமிழக அரசியலை தீர்மானித்து வந்த நிலையில், தற்போது வந்திருக்கும் முடிவுகள் மாபெரும் மாற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. இளம் தலைமுறையினருடன் வீட்டில் இருந்தவர்களும் இணைந்து ஏற்படுத்திய இந்த மாற்றத்தை எப்படி பார்ப்பது? அரசியல் இயக்கங்கள் என்ன செய்யத் தவறின என்பதை பெண் ஆளுமைகள் சிலரிடம் விவாதித்ததில்…

டிஜிட்டல் மூளைச் சலவை

பரிமளா, சமூக செயற்பாட்டாளர்

‘‘அரசியல் அனுபவம் இல்லாத நடிகர் ஒருவர், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில், கட்சியின் கட்டமைப்பும் வலுவாக இல்லாத நிலையில், தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடிந்தது அதிர்ச்சியான விஷயமாய் பார்க்கப்படுகிறது.புதிதாய் ஒருவர் வருகிறார். வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம் என வெகுளித்தனமாய் பேசும் மக்களின் அரசியல் அற்ற தனத்தின் வெளிப்பாடே இது.

அரசியலுக்கு வரத்தகுதி என்பது நல்ல மனசு, ஊழல் செய்யாதவர், லஞ்சம் வாங்காதவர் என்பதாகவும் சிலரால் பேசப்பட்டது. ஆளை மாற்றுவதன் மூலம் ஒரு அதிகாரத்தை சுலபமாய் கொண்டுவர முடியும் எனவும் நினைக்கிறார்கள். எல்லா நாட்டுக்கும் ஒரு வரலாறு இருப்பதுபோல் தமிழ்நாட்டிற்கும் இரண்டாயிரம் ஆண்டுகால வரலாறு இருக்கிறது. இதுவும் மேலோட்டமாய் பார்க்கப்படுகிறது.தமிழ்நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரக் கொள்கை, மாநில அரசு என்றால் என்ன? ஒன்றிய அரசு என்பது என்ன? மாநில அரசுக்கு அனைத்து அதிகாரமும் இருக்கிறதா? மாநில அரசை ஒன்றிய அரசு எவ்வாறு கட்டுப்படுத்துகிறது? நிதி சுதந்திரம், சட்டம் இயற்றும் சுதந்திரம் மாநில அரசிற்கு உண்டா? என்பனவற்றை புரிந்துகொண்ட பிரிவினர் கம்மியாகவே இருப்பதை இந்தத் தேர்தல் உணர்த்தியது.

புதிதாக பதவியேற்றிருக்கும் கட்சியும் அதன் தலைமையும், அரசியல் களத்திற்கே வராமல், என்.ஜி.ஓ தனமான நடவடிக்கைகளில் ரசிகர் மன்றத்தை ஈடுபடுத்தி, சினிமா பாணி வசனங்களைப் பேசி, இளைஞர்களை, குழந்தைகளை உசுப்பேற்றி, டிஜிட்டல் இன்ஃப்ரா ஸ்ட்ரெக்ஷர், சென்டிமென்ட் டூல்ஸ் மூலம் மூளைச் சலவை செய்யும் மென்பொருள் உபகரணங்களை பயன்படுத்தி வெற்றி பெற்றதற்கான தரவுகள் வந்துகொண்டே இருக்கிறது.தற்போது ஆளுகின்ற கட்சி, ஏற்கனவே ஆட்சியில் இருந்த அரசுகள் கொண்டுவந்த மக்கள் நல திட்டங்களை மேலோட்டமான புரிதலோடு கொண்டுவந்தனரே தவிர, அதற்குப் பின் இருக்கக்கூடிய சமூகநீதி அரசியல் குறித்து, தத்துவார்த்த அரசியல் பின்னணி குறித்து, கட்சிக்கோ அதன் தலைவருக்கோ புரிதல் இல்லை. அதிகார வேட்கையில் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருந்தது.

மாநில உரிமை, அதன் கடந்தகால வரலாறு, சாதிய சிக்கல்கள், இட ஒதுக்கீடு, வன்முறை, மாற்றத்திற்கான செயல் வடிவம் என்பவை குறித்து தெளிவான உரையாடலை மக்களிடம் பேசி அவர் வாக்குகளை பெறவில்லை. ஒரு தலைமுறையினர் அரசியல் மயமாகி இருந்தால் இவ்வளவு சுலபமாக டிஜிட்டல் மூளைச் சலவை செய்திருக்க முடியாது.1967ல் நிகழ்ந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்ற மாணவர்கள் எழுச்சியில் திராவிட கட்சிகள் வந்தது.

அரசியல் புரிதலோடு, மாணவர் தலைவர்களாக இருந்த பலரும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். இடதுசாரி அரசியலில் மாணவர்கள், இளைஞர்களை நோக்கிச் செல்லும் கண்ணோட்டம் இருந்தாலும், திராவிட சித்தாந்தங்களை பேசக்கூடியவர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியிலும்… இளைஞர்கள் மத்தியிலும்… தங்களின் அரசியல் நடவடிக்கையை நிறுத்திய செயல்பாடுகளே பிரச்னையாக இன்று மாறியிருக்கிறது. இரண்டு தலைமுறையாகவே அரசியல் நீக்கம் செய்யப்பட்டதன் விளைவை இன்று நாம் சந்திக்கிறோம்.’’

சினிமாவை உண்மையென நம்பும் தலைமுறை

அமுதா, கருப்பு பிரதிகள்

‘‘அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள் பாடுபட்டதன் விளைவு நாம் நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம். நமது முந்தைய தலைமுறை பெரும்பாலும் படிக்காதவர்கள். ஆனாலும் டீ கடைகளிலும், முடிதிருத்தும் நிலையங்களிலும் அரசியலை, மக்கள் பிரச்னைகளை, சமூக நீதிக்கான, சமூக நல்லிணக்கத்துக்கான விசயங்களை பேசினார்கள். விவாதித்தார்கள். பொது இடங்களில் விவாதித்ததன் மூலமாகவே இயக்கங்கள் வளர்த்தெடுக்கப்பட்டது.

காலப்போக்கில் இங்கு அரசியல் பேசாதீர்கள் என எழுதி வைக்கப்பட்ட நிலை உருவானது. இது பொது இடம் தாண்டி வீடுகளுக்குள்ளும் அரசியல் பேசுவதை நிறுத்தியது. அரசியல் அற்ற அடுத்த தலைமுறையினரிடம் சினிமா வெகுவாக நுழைந்தது.சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளை சின்னத்திரை ஆக்கிரமிக்கத் தொடங்க, செய்தி ஓடிக்கொண்டிருந்த வீடுகளில் இருந்த இளம் தலைமுறையினர் சினிமாவிற்குள் மூழ்க ஆரம்பித்தனர். கலை, இலக்கியம், ஓவியம் போன்ற பண்பாட்டுத் தளங்களில் இயங்கியவர்கள், புகழ் வெளிச்சம் கொடுக்கிற சினிமாவை நோக்கி நகர ஆரம்பித்தனர்.

சமூக வலைத்தளங்கள் வரவால், சினிமாவில் இருந்த சின்னச் சின்ன விசயங்களும், ஷாட்ஸ், ரீல்ஸ் என ஆக்கிரமிக்க, சினிமாவை உண்மை என நம்பும் தலைமுறை உருவாக ஆரம்பித்தது. தங்கள் குழந்தைகள் விஜய் மாதிரி நடனம் ஆடுவதையும், அஜீத் மாதிரி உடை உடுத்துவதையும் பெற்றோர் ரசிக்க ஆரம்பித்ததன் விளைவுதான் இன்றைய தேர்தல் முடிவு.சினிமாவுக்கு அப்பாற்பட்டு குழந்தைகளை வளர்க்க வேண்டிய நிலையில் இன்று நாம் இருக்கிறோம். சினிமாவில் வருவதெல்லாம் உண்மையில்லை என்பதை, உணர்வு நிலையில் இருந்து அறிவு நிலை வளர்ச்சிக்கு மாற்றி, இளம் தலைமுறையினரை வளர்த்தெடுப்பது அவசியமானதாக இருக்கிறது.

செய்திகளை வீடுகளுக்குள் ஓடவிட்டு, அரசியல் சொல்லிக் கொடுத்து பிள்ளைகளை வளர்க்க வேண்டும். குடும்பத்திலும், குழந்தைகளிடமும் அரசியல் பேசினால் மட்டுமே அடுத்த தலைமுறை சரியாக வளரும். நம்மைப் போன்றவர்களும் உண்மையான அரசியலை, நம் அரசியல் பண்பாட்டு நாகரீகத்தை, மதச்சார்பற்ற சமூக நீதியை, சம உரிமை… பெண் உரிமை போன்ற விசயங்களை இளைஞர்களிடம் கடத்த வேண்டியது முக்கியமானது.’’

இயக்கங்கள், கூட்டங்களிலும், மாநாடுகளிலும் பேசுவதோடு சரி…

கிருஷ்ணவேணி, சமூக செயற்பாட்டாளர்

‘‘திரைபிம்பங்கள் கொடுக்கும் கவர்ச்சியிலும், வேட்பாளர்கள் யார் எனத் தெரியாமலும் வாக்களித்தவர்களே இந்தத் தேர்தலில் அதிகம். புதிதாய் ஒரு மாற்றத்திற்கு முயற்சிக்கிறோம், சரியில்லை எனில் தூக்கிப் போடுகிறோம் என்கிற அளவுக்கு இளம் தலைமுறையினர் இருக்கின்றனர்.சமூக வலைத்தளங்களின் தாக்கத்தில் சிக்கி, 10 வரிகளில் இருக்கும் செய்திகள், தகவல்களைக்கூட இன்றைய தலைமுறை படிக்க ஆர்வம் காட்டுவதில்லை. எல்லாமே ஒரு செகண்ட் அல்லது இரண்டு செகண்டுக்குள் ரீல்ஸ் வடிவில் இருக்க வேண்டும். கல்வியும் மதிப்பெண் சார்ந்த ஒன்றாக மாறியுள்ள சூழலில், சமூக அறிவியல் போன்ற பாடங்கள் வெறுக்கப்படுகிற, துளியும் விரும்பாத பாடங்களாக மாணவர்களுக்கு மாறியிருக்கிறது. புத்தகங்களை தேடிப்பிடித்து வாசித்த தலைமுறை குறைந்துவிட்டது. கல்லூரிகளிலும் அரசியல் சார்ந்த பாடங்கள், விவாதங்கள் நிகழ்ந்தன. கடந்த தலைமுறை பார்த்து வளர்ந்த அரசியல் தலைவர்கள், களப் போராளிகளை இன்றைய தலைமுறையினர் பார்க்கவில்லை.

கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இன்றைய தலைமுறை அடைந்திருக்கும் மாற்றங்கள் எப்படியானது? யார் யார் அதற்காக பங்காற்றியிருக்கிறார்கள் என்கிற வரலாறும் போதிய அளவில் பாடங்களாகவும், இயக்கங்கள் வழியாகவும் அவங்களுக்கு கற்பிக்கப்படவில்லை. உதாரணத்திற்கு இடதுசாரி இயக்கங்கள், இயக்கம் சார்ந்த கூட்டங்களிலும், மாநாடுகளிலும் பேசுவதோடு சரி.இளைஞர்களுக்கு புரிகிற மொழியில், பேசி புரியவைக்க முயல்வதில்லை.’’

இளைஞர்களிடம் உதிரித் தன்மை உருவாகியிருக்கிறது.

ரமணி, சமூக செயற்பாட்டாளர்

‘‘மாற்றம் தேவை என்றாலும், எத்தகைய ஒரு தலைமையை தங்களுக்கானவராய் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்பதே இதில் முக்கியம். அரசியல் ஆளுமை உள்ள, நாட்டை வழிநடத்தக்கூடிய, மக்கள் நலனில் அக்கறை கொண்ட, மத்தியில் இருக்கிற ஒன்றிய அரசை வலிமையாய் எதிர்க்கக்கூடிய தலைமையை தேர்ந்தெடுத்து இருக்கிறார்களா என்றால் கேள்விக்குறிதான்?

அப்படியான தலைமை சினிமாவில் இருந்து வராது. நமக்கான தலைவனை சினிமா மோகத்தில் தேர்ந்தெடுக்கக்கூடாது. களத்தில் நின்று… மக்களுக்காக பணியாற்றக்கூடிய இயக்கங்கள், அதிலுள்ள ஆளுமைகள், தலைவர்களில் இருந்தே அந்தத் தலைமைப் பண்பு உருவாகும். நடிகர் விஜயின் வருகை, GenZ தலைமுறையிடம் கிளர்ச்சியை தூண்டிய கூட்டமாகவே இருந்தது. இந்த வகையில், இளம் தலைமுறையினரை நாம் அரசியல்படுத்த தவறிவிட்டோம் என்றே நினைக்கிறேன். விளைவு உதிரித் தன்மை ஒன்று இளைஞர்களிடம் உருவாகியிருக்கிறது. அதற்காக ஒட்டுமொத்த இளைஞர்களுமே அரசியல் அற்றவர்கள் என்றும் சொல்லிவிட முடியாது.

குறிப்பிட்ட சதவிகித இளைஞர்கள் இப்படியாக உள்ளனர். குடும்பத்தில் உள்ளவர்களும் இதில் அடக்கம்.1970, 80களின் காலக்கட்டத்தில், கம்யூனிச இயக்கங்கள், பெரியாரிய இயக்கங்கள் கல்லூரிகளில் உள்ள மாணவர் சங்கங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், தங்கள் இயக்கங்களையும் மாணவர்களிடம் கட்டமைத்தார்கள். விளைவு மொழி உரிமை, ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களை அன்றைய இளைஞர்கள் முன்நின்று நடத்தினர்.’’

இன்றுள்ள தலைவர்கள் மாணவர் அமைப்பில் இருந்தவர்களே…

மகா அமிர்தா, மக்கள் அதிகாரக் கழகம்

‘‘இன்றைய இளம் தலைமுறை நடிகரின் கவர்ச்சிவாத அரசியலுக்கு எளிதாய் பலியாகியுள்ளனர். பிள்ளைகள் சொல்வதைக் கேட்டு, வீட்டிலிருக்கும் பெற்றோர்களும், பெரியவர்களும் தங்கள் வாக்கை, எப்படி செலுத்தினார்கள் என்பதையும் சேர்த்தே இங்கு பார்க்க வேண்டியுள்ளது.தங்கள் உரிமைகளுக்காக ஓட்டுப் போடுகிறோம் என்ற தேர்தல் ஜனநாயகத்தை மறந்து, ஓட்டுக்காக தேர்தல் என்ற ரீதியில், அரசியல் கொள்கை, கோட்பாடுகளை பேசாமல், தங்கள் கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத்திற்காக போராடுவதைத் தாண்டி, பாமரத்தனமாய் விஜய் போன்ற நடிகர்களின் கவர்ச்சி வாக்குறுதிகளைக் கேட்டு விழுந்துள்ளனர் என்பதையும் பார்க்க வேண்டும்.

இளைஞர்கள் ஏன் அரசியலற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள் என்பதற்கு தமிழ்நாட்டின் வரலாற்றை நாம் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். கம்யூனிஸ இயக்கங்கள், திராவிட இயக்கங்கள் போன்றவை மாணவர்களை கொள்கை ரீதியாகவும், சித்தாந்தங்களின் அடிப்படையிலும் அரசியல்படுத்தி, போராட்டங்களைக் கட்டி அமைத்தனர். இன்றுள்ள அரசியல் தலைவர்கள் பலரும், ஒரு காலத்தில் மாணவர் அமைப்பில் இருந்தவர்களே.

மாணவர்களுக்கான அரசியல் என்பது கல்லூரிகளில் இல்லாமல் ஆக்கப்பட்டதன் விளைவு, அரசியல் அற்ற தலைமுறையாக இன்றைய இளைஞர்களும், மாணவர்களும் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். கவர்ச்சிவாத அடிப்படையில் இளைஞர்கள் மூலம் பதவியை பெற்றுவிட முடியும் என்பதற்கு இன்றைய அரசு உதாரணம். எதிர்காலத்தில் இது தொடரவும் வாய்ப்புள்ளது’’.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

Related Stories: