நன்றி குங்குமம் தோழி
கோடை விடுமுறை… பள்ளியின் ஒரு ஆண்டு இறுதியில் நீண்ட தேர்வுகள் முடிந்து மனதளவிலும் உடலளவிலும் சோர்வாக இருக்கும் மாணவர்களை உற்சாகமூட்டும் காலம். அந்த ஒன்றரை மாதங்கள் குழந்தைகள் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் குதூகலமாக இருப்பார்கள். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். சிலர் பயனுள்ள வகையில் நீச்சல், ஓவியம், கணினி, விளையாட்டு, தற்காப்புக் கலைகள் போன்ற தனிப்பட்ட பயிற்சி மேற்கொள்வார்கள்.
சொந்த ஊர் கிராமப்புறமாக இருந்தால் அங்கு செல்லவே சிலர் விரும்புவார்கள். இயந்திரமயமான நகர்ப்புற வாழ்க்கையை பார்க்கும் குழந்தைகளுக்கு தாங்கள் வளர்ந்த இயற்கையான, சுத்தமான, பசுமையான சூழலையும் அங்குள்ள ஆடு, மாடு, கோழி போன்ற பிராணிகளுடன் பழகும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகின்றனர். சொந்த ஊர் இல்லாதவர்கள் இந்த இயந்திர வாழ்க்கையில் சிக்கிக் கொள்ளாமல் கிராமத்தின் அனுபவங்களை தங்களின் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களின் உற்சாக இடம்தான் ‘வக்ஷனா ஃபாம்ஸ்’. இதன் அமைப்பாளர் கிருபா சங்கர், கிராம வாழ்க்கைக்காக ஏங்கும் பெற்றோர்களுக்கு கண் முன்னே அதனை அறிமுகப்படுத்தி கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் தங்கள் குழந்தைகளுடன் கழிக்க உதவுகிறார்.
‘வக்ஷனா ஃபாம்ஸ்’, திண்டிவனம் மற்றும் செஞ்சிக்கு இடையில் இரட்டணை என்ற கிராமத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 2011ல் தொடங்கப்பட்ட பண்ணை வீடு. இயற்கை வழி விவசாயம்தான் எங்களின் பிரதான தொழில். இந்தப் பண்ணை உருவாக காரணமே எங்க லட்சுமி பாட்டியும் என் அம்மா கஸ்தூரியும்தான். 92 வயது வரை எங்க பாட்டி வாழ்ந்தாங்க. கஸ்தூரி அம்மாவிற்கு 75 வயது. நான் பேராசிரியர். நானும் எங்கம்மாவும்தான் இந்த ஃபாமை கவனித்துக் கொள்கிறோம். இங்கு எல்லாவித மரங்கள், பழத்தோட்டம், காய்கறி தோட்டம், பூந்தோட்டம், மூங்கில் தோட்டம் என அனைத்தும் இருக்கு.
எங்களுக்கு மட்டுமில்லை இங்கு வந்து தங்குபவர்களுக்கும் அரிசி முதல் தேங்காய், காய்கறிகள், பழங்கள் என அனைத்தும் எங்க தோட்டத்தில் இயற்கை விவசாயம் மூலம் விளைவதைதான் பயன்படுத்துகிறோம். விருந்தினர்களுக்கு நஞ்சில்லா உணவைத் தந்து பண்ணை வீட்டின் அனுபவத்தையும் சிறந்த முறையில் தருகிறோம்’’ என்றவர் ‘ஃபாம் ஸ்டே’ குறித்து விவரித்தார். ‘‘2011ல் இந்த ஃபாமை ஆரம்பிக்கும் போது சுற்றிலும் நெல்வயல் மற்றும் களிமண் பூமியாகத்தான் இருந்தது. மரங்கள் ஒன்றுகூட இல்லை.
நந்தவனம் போல் மாற்ற வேண்டும் என்று அம்மா மற்றும் பாட்டியின் முழு முயற்சிதான் இந்த பண்ணை வீடு. என் அம்மா சூப்பரா சமைப்பாங்க. எங்க விருந்தினர்களுக்கு அம்மாவின் பாரம்பரிய சமையல்தான் விருந்தாக தருகிறோம். அம்மாவிற்கு தற்போது பத்ம விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாட்டியும் அம்மாவும் இணைந்து ‘The Taste of Vakshana Farms’ என்ற பெயரில் தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுகள் அடங்கிய புத்தகத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளனர்.
வக்ஷனா என்றால் வளமான மற்றும் பசுமையான தாவரங்கள் என்று அர்த்தம். இங்கு இரண்டு வீடுகள் உள்ளன. குடும்பமாக வந்து தங்கி மகிழலாம். பண்ணை வீடு என்றாலும் ஏசி, ஃபிரிட்ஜ், நூலகம் என அனைத்து வசதிகளும் உண்டு. நகரமயமான வாழ்க்கையில் இயந்திரம் போல் வாழ்பவர்களுக்கு கிராமத்து வாசனையுடன் கூடிய புத்துணர்வு கிடைக்க வேண்டும் என்பதால், மற்ற ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள் போல் கேளிக்கை விடுதிகளாக செயல்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதனால் அசைவ உணவு, மது போன்றவை இங்கு அனுமதிப்பதில்லை.
கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் பிரத்யேகமாக குழந்தைகளுக்காக ‘சம்மர் கேம்ப்’ நடத்துகிறோம். மே மாதங்களில் ஒவ்வொரு வார சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த கேம்ப் நடக்கும். சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு முடியும். 4 வயது குழந்தை முதல் 14 வயது குழந்தைகள் வரை பங்கேற்கலாம். அவர்களுடன் பெற்றோர்களும் வரலாம். நஞ்சில்லா விவசாயத்தின் நன்மைகள், ரசாயனம் கலந்த உணவால் ஏற்படும் தீங்குகள், கால்நடைகளின் முக்கியத்துவம் மற்றும் தற்சார்பு வாழ்க்கை ஆகியவற்றை குழந்தைகளுக்கு அறிவுறுத்துகிறோம். 24 மணி நேரம் விவசாயிகளாகவே அவர்கள் மாறிவிடுவார்கள்’’ என்றவர் சம்மர் கேம்ப்பின் செயல்பாடுகள் மற்றும் படி நிலைகளை விவரிக்கிறார்.
‘‘சனிக்கிழமை காலை சரியாக 9.30 மணிக்கு எல்லோரும் வந்து விடவேண்டும். குழந்தைகள் நேர மேலாண்மையை பின்பற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தலில் ஆரம்பிக்கிறது எங்கள் செயல்பாடு. பிறகு எங்கள் பண்ணையின் வரலாறு, சிறப்பு மற்றும் பாதுகாப்பு அறிவுரைகள், விலங்குகளுடனான எச்சரிக்கை குறித்த விளக்கம் அளிக்கப்படும். அடுத்ததாக பண்ணைச் சுற்றியுள்ள இடங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ‘கைடட் வாக்’. அதில் தோப்புகள், பழத்தோட்டங்கள், பூந்தோட்டங்கள், பம்ப் செட், குளங்கள் என அனைத்தும் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வோம். குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் டிராக்டரில் பயணம் செய்து விவசாய நிலத்தில் உழுதல் மற்றும் விதைத்தல் ஆகியவற்றை குழந்தைகள் அவர்கள் கைகளாலேயே செய்வர்.
மதிய உணவிற்கு தேவையான காய்கறி, கீரைகளையும் குழந்தைகள்தான் அறுவடை செய்வர். வெயில் தாக்கத்தைக் குறைக்க பக்கத்தில் மழைநீரை சேகரித்து உருவாக்கப்பட்ட குளம் மற்றும் பம்பு செட்டில் குளிக்கவும் பாதுகாப்புடன் அனுமதிக்கிறோம். உணவு இடைவேளையில் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்படும். முதலில் குழந்தைகள் சாப்பிடுவார்கள். அடுத்து குழந்தைகள் பெற்றோர்களுக்கு பரிமாறுவார்கள். அவர்கள் சாப்பிட்ட தட்டுகளை அவர்களே கழுவி வைப்பார்கள். தற்சார்பு வாழ்க்கையை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் எங்கள் சிறிய முயற்சி இது’’ என்கிறார் கிருபா.
‘‘மதிய வேளையில் வெயில் அதிகமாக இருக்கும் போது மரத்தடியில் அமர்ந்து பாரம்பரிய விளையாட்டுகளான பரமபதம், தாயம், ஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழி, பம்பரம் போன்றவற்றை விளையாடுவர். கயிற்றுக்கட்டிலில் தூக்கம் போடலாம். மாலையில் ஒரு பகுதியில் குழந்தைகள் அவர்கள் பெயரில் மரமோ செடியோ நடுவர். பிறகு ‘Nature is a Teacher’ என்ற அடிப்படையில் சில கருத்துகளை குழந்தைகளுக்கு கூறுவோம். இரவில் குழந்தைகள் பண்ணையில் கிடைக்கும் சுள்ளி, விறகு போன்றவற்றைச் சேகரித்து கேம்ப் ஃபையர் செய்வார்கள். சுற்றி அமர்ந்து நிலாச் சோறு சாப்பிடுவார்கள். தொடர்ந்து பாடல்கள், பாட்டி கதை, நடனம் என இரவு கழியும். மறுநாள் ஞாயிறு காலை 5.30 மணிக்கு எழுந்து நடைப்பயிற்சி, பண்ணையில் உள்ள விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவு அளிக்கும் போது பால் கறப்பது, தீவனம் தருதல் ஆகியவற்றை பற்றி விவரிப்போம்.
எங்கள் பண்ணையில் ஆடு, மாடு, வாத்து, கோழி, குதிரை, ஒட்டகம் என 14 வகையான கால்நடைகள் இருக்கின்றன. அவற்றுடன் பழகும் வாய்ப்பையும் விவசாயத்தில் கால்நடைகளின் முக்கியத்துவம் குறித்தும் விளக்குவோம். பூந்தோட்டத்திற்கு சென்று பூக்கள் பூப்பது, மகரந்த சேர்க்கை, தேனீக்கள் குறித்த செய்திகளையும் சொல்வோம். பின்பு பாரம்பரிய காலை உணவான கம்புக்கூழ், கஞ்சி, பழைய சாதம் பரிமாறுவோம். இரண்டு நாட்கள் பார்த்தவை குறித்து குழந்தைகளிடம் கலந்துரையாடல் நடைபெறும்.
பெற்றோர்களும் அவர்கள் அனுபவத்தை பகிர்வார்கள். 10 மணியளவில் கேம்ப் முடிவுறும். அடுத்த தலைமுறையை நல்ல முறையில் வழிநடத்தும் முக்கிய பொறுப்பு பேராசிரியராக எனக்கும் இருக்கிறது. குழந்தைகளும் பெற்றோர்களும் ஒருமித்து தங்கள் அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிரும் போது எனக்கான கடமையை சரியான முறையில் செய்து வருகிறேன் என்று நினைக்கும் போது மனசுக்கு நிறைவாக இருக்கிறது. வரும் வாரங்களில் குழந்தைகளின் வரவுக்காக காத்திருக்கிறேன்’’ என்று புன்னகையுடன் கூறினார் கிருபா சங்கர்.
தொகுப்பு:கலைச்செல்வி
