சமூக மீட்சையின் அடையாளமே Pride Stitch

நன்றி குங்குமம் தோழி

பிச்சை எடுக்கறதையும் பாலியல் தொழில் செய்றதையும் விட்டா வேற வழியே இல்லை அப்படின்னு சொல்லப்பட்ட ஒரு சமூகத்தின் பிரச்னையை, சஸ்டயினபில் பிசினஸ் மாடலாக எப்படி மாற்றுவது என்பதற்கு மதுரை சிப்காட்டில் இயங்கி வரும், ‘ப்ளூ ஐலன்ட் ப்ரைட் ஸ்டிச்’ (Pride stitch) ஆண்கள் ஆடை தயாரிப்பு நிறுவனம் சிறந்த உதாரணம்.

முற்றிலும் திருநங்கைகள், திருநம்பிகளால் இயங்கி வரும் இந்நிறுவனம் எவ்வாறு தொடங்கப்பட்டது… இதன் வணிக உத்திகள் என்னவென அறிய, நிறுவனத்தின் உரிமையாளர் அமிர்தா மற்றும் மதுரையில் இயங்கி வரும், டிரான்ஸ்ஜென்டர் ரிசோர்ஸ் சென்டர்(TRC) அமைப்பின் நிர்வாக இயக்குநர் பிரியா பாபு இருவரையும் சந்தித்ததில்… முதலில் பேசியவர் அமிர்தா.

‘‘சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மற்றும் பெங்களுரூ மவுண்ட் கார்மெல் கல்லூரிகளில் நானோ டெக்னாலஜி முடித்த முதுகலை மாணவி நான். எனது கணவர் கடந்த 15 ஆண்டுகளாக ஆண்கள் அணியும் பிரான்டெட் ஷர்ட்டுக்கான தயாரிப்பு நிறுவனத்தை வெற்றிகரமா நடத்தி வரும் நிலையில், தொழில் சார்ந்த பயணங்களை நானும் அவருமாக மேற்கொள்ளும்போது, சாலைகளிலும், சிக்னல்களிலும் மாற்றுப் பாலினத்தவர் நின்று யாசகம் செய்வதை தொடர்ந்து பார்த்துவந்த நிலையில், பாதுகாப்பான பணிச்சூழலை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்களால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியுமா? என்கிற எங்களின் ஒற்றைக் கேள்வியில் எழுந்ததே, ஒட்டுமொத்த மாற்றத்திற்கும் அடித்தளமாய் அமைந்தது’’ என்றவர் மேலும் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

‘‘சமுதாயத்தால் புறந்தள்ளப்பட்ட ஒரு சமூகத்துக்கு வேலை வாய்ப்பை கொடுப்பதற்கு முன், அவர்கள் சந்திக்கின்ற உளவியல் சிக்கல்களை முழுமையாகப் புரிந்த அமைப்பின் ஆதரவும் எங்களுக்குத் தேவைப்பட்டது. இதற்காகவே மதுரையில 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிற TRC அமைப்பின் நிர்வாக இயக்குநர் பிரியா பாபுவை சந்தித்து, தெளிவான திட்டத்தை உருவாக்கி, ‘பிரைட் ஸ்டிச்’ என்ற இந்த யூனிட்டை மதுரை சிப்காட்டில் தொடங்கி, TRC மூலமாகவே மாற்றுப் பாலினத்தவரை மட்டுமே பணிக்கு தேர்ந்தெடுத்தோம்.

கட்டிங் தொடங்கி, பேக்கிங் வரை ஒரு ஆடை தயாரிப்பு நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது என்கிற ஓரியன்டேஷன் பயிற்சிகளை, ஏற்கனவே இயங்கி வரும் எங்கள் பழைய நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று வழங்கியதோடு, திருநங்கைகள், திருநம்பிகள் என தற்போது 15க்கும் மேற்பட்ட மாற்றுப் பாலினத்தவர் எங்கள் Pride Stitch கார்மென்ட் நிறுவனத்தில் பணி செய்கின்றனர்.

உழைச்சாதான் சாப்பாடு… இல்லன்னா பட்னி என்ற நிலையில் இருக்கின்ற ஒரு சமூகத்திற்கு, முதல் நாளில் இருந்தே சம்பளம் கொடுப்பதென்பது, வெறும் சலுகை கிடையாது என்பதால், அவர்களின் பயிற்சி காலத்தில் இருந்தே முழு சம்பளமும் கொடுக்க ஆரம்பித்ததுடன், ஊக்கத் தொகையும் வழங்கி வருகிறோம். கூடவே மதியம் உணவு, காலை, மாலை தேநீர் இவற்றுடன், பாதுகாப்பாய் தங்க, அரசு அங்கீகாரம் பெற்ற ‘அரண்’ தங்கும் விடுதியையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம்.

பணியில் இணைய முதல் தடையே இவர்களின் ஆவணங்கள்தான். கல்விச் சான்றிதழ்கள், பான் கார்டு, ஆதார் அட்டை என அனைத்திலும் பழைய பெயரும், பாலினமுமே அடையாளமாய் இருப்பதால், அவற்றை வைத்து வங்கிக் கணக்கு தொடங்குவது இயலாத காரியம். TRC அமைப்பு இந்தப் பிரச்னையை கையாண்டு, மாற்றுப் பாலினத்தவர்களின் ஆவணங்களை முறையாக சரிப்படுத்தி எங்களிடம் தருகிறார்கள். மேலும், அவர்களின் உளவியல் பிரச்னைகள், குடும்ப பிரச்னை, வாடகைக்கு வீடு எடுப்பது, பாலின அறுவை சிகிச்சை தொடர்பான மன உளைச்சல் என பல தனிப்பட்ட விஷயங்களையும் TRC அமைப்பைச் சேர்ந்தவர்களே உடனிருந்து சரி செய்கின்றனர்.

ஒரு முழு ஷர்ட்டை உருவாக்க குறைந்தது 25ல் இருந்து 30 பேர் கொண்ட அசெம்பளி லைன் எங்களுக்குத் தேவைப்படுகிறது. தற்போது எங்களிடம் மாற்றுப்பாலின பணியாளர்கள் குறைவாகவே இருப்பதால், ஒருசில பாகங்களை மட்டுமே இவர்களை வைத்து தயாரிக்கிறோம். எங்களின் இலக்கு வருகிற தீபாவளிக்குள் ஒரு முழு பிராண்டெட் ஷர்ட்டை இவர்களை வைத்து உருவாக்கி, மார்க்கெட்டில் கொண்டுவர வேண்டும் என்பதே. Pride stitch யூனிட்டை கூடுதல் விரிவாக்கம் செய்ய இன்னும் அதிகமான மாற்றுப்பாலின பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். விருப்பமுள்ளவர்கள் அணுகலாம்’’ என்றவாறு விடைபெற்றார்.

இரண்டு வெவ்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் தங்களுக்குள் இருக்கும் பலத்தை உணர்ந்து, மிகப்பெரிய சமூக மாற்றத்தை மதுரை நகரில் உருவாக்கியுள்ளனர். தொழில் அதிபர் அமிர்தாவும், சமூக சிந்தனையாளர் பிரியா பாபுவும் இணைந்து செய்த இம்முயற்சி சட்டையை தைக்கும் பணி மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் கண்ணியத்தை நெசவு செய்யும் பணி. விளிம்பு நிலையில் இருந்தவர்களை, கையேந்தும் நிலையில் இருந்து உற்பத்தி செய்யும் நிலைக்கு மாற்றுவதே உண்மையான சமூக நீதியாகும்.

அடுத்தமுறை ஆன்லைனிலோ அல்லது கடையிலயோ ஒரு சட்டையினை தேர்ந்தெடுத்து நீங்கள் வாங்கும்போது, ஒருவேளை அது Pride stitch பிராண்டாக இருந்தால், நீங்கள் உடுத்துவது வெறும் துணி அல்ல… பல ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட சமூக மீட்சையின் அடையாளம். அவர்களின் பெருமை. அவர்கள் செய்யும் ஒவ்வொரு தையலும், கிழிந்துபோன ஒரு சமூக அமைப்பை மீண்டும் தைத்துச் சேர்க்கும் அழகான முயற்சி.

திருநங்கைகளுக்கான முதல் நூலகம் இது… பிரியா பாபு, TRC அமைப்பு

‘‘கடலுக்குள் கப்பலை செலுத்துவதற்கு முன் அந்தக் கப்பலுக்கு வலுவான நங்கூரம் முக்கியம் இல்லையா? எங்கள் அமைப்பின் வழியாக மாற்றுப் பாலினத்தவர் மனதுக்கு நங்கூரம் கொடுத்தாச்சு. அந்த நங்கூரமே நூலகத்தில் நாங்கள் சேகரித்து வைத்திருக்கும் ஆவணங்கள்.ஆம்! அடையாளமும் சுயமரியாதையும் பறிக்கப்பட்ட சமூகத்திற்கு வேலை கொடுப்பதற்கு முன், அவர்களுக்கான பெருமிதத்தை மீட்டெடுப்பது எங்களின் வரலாற்று ஆவணங்கள் மூலமாகவே.

இதற்காகவே மதுரை நறிமேடு பகுதியில் உள்ள எங்கள் டிரான்ஸ்ஜென்டர் ரிசோர்ஸ் சென்டரில்(TRC), இந்தியாவின் முதல் திருநங்கைகள் நூலகத்தை அமைத்திருப்பதுடன், அதில் அவர்களுக்கான புத்தகங்கள் 3 ஆயிரத்திற்கும் மேல் இடம்பெறச் செய்துள்ளோம். 1999ம் வருடத்தில் இருந்து சேகரித்து ஆவணப்படுத்திய, மாற்றுப்பாலின சமூகம் குறித்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேப்பர் கட்டிங் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணப் படங்களும் இதில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆர்ட் கேலரி ஒன்றையும் இணைத்துள்ளோம்.

சிலப்பதிகாரத்தில் வருகிற நடுகல் கதை, சீவக சிந்தாமணி, முகலாயர் காலத்தில் எழுதப்பட்ட அக்பர் நாமா, ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த கிரிமினல் டிரைபல் ஆக்ட் வரை திருநங்கைகள் வரலாற்றை, ஓவியங்களாக மாற்றி வரைந்து வைத்திருக்கிறோம். முக்கியமாக திருநங்கை ஒருவர் இங்கு வரும்போது, நான் இந்த சமூகத்தால் ஒதுக்கப்பட்டவள் கிடையாது. எனக்கென்று ஒரு நெடிய வரலாறு இருக்கென்ற சுயமரியாதையை உணர்கிறார்.

எழுத்தாளர் சு.சமுத்திரம் பெயரால் வருடா வருடம் இலக்கிய விழா மற்றும் சிறுகதை போட்டிகளையும் நடத்தி வருகிறோம். இதற்கென வருகிற நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகளை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி அவற்றை ஆவணப்படுத்தி வைக்கிறோம்.முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள் சிலவற்றில், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கான தனிப் பிரிவு தொடங்கப்பட்டது. இதில் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதற்குப் பின்னாலும் எங்கள் TRC அமைப்பின் பங்கு முழுமையாக இருக்கின்றது.

ஒரு நபர் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு செல்வது சாதாரண காய்ச்சலுக்கு ஊசி போடுகிற மாதிரியான விஷயம் கிடையாது. குறைந்தது 6 மாதங்கள் பிடிக்கின்ற நெடிய பயணம். இதில், என்டோகிரைனாலஜி, நியூராலஜி, சைக்காட்ரிஸ்ட், ரத்தப் பரிசோதனை, மயக்கவியல் நிபுணர் என மொத்தம் 12 படிகளை கடக்க வேண்டிய நிலை இருக்கும். இந்த இடத்தில் எங்கள் அமைப்பு மிட் மேனேஜ்மென்டாய் செயல்பட்டு, அந்த 12 படிகளை முழுமையாய் கடக்க அவர்களுக்கு அரணாக இருக்கும்.’’

 

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

Related Stories: