இல்லத்தரசிகளை தொழில்முனைவோராக மாற்ற வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

ஃபேஷன் உலகத்தில் மாற்றம் ஏற்பட்டு வந்தாலும், அதனை வடிவமைப்பவர்களுக்கு என்றுமே தனிப்பட்ட அடையாளம் அந்த துறையில் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட உலகில் தனக்கென தனிப்பட்ட இடத்தை தக்கவைத்துக் கொண்டது மட்டுமில்லாமல் ஆதரவற்ற பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறார் கோவையை சேர்ந்த சுகுணா ஷண்முகம்.

இல்லத்தரசியாக இருந்தவர் இப்போது தொழில்முனைவோராக உயர்ந்துள்ளார். இவரைப் போல் மற்ற இல்லத்தரசிகளும் தொழில்முனைவோராக வர வேண்டும் என்ற கொள்கையில் ‘ஃபேஷன் ஆர்ட்’ என்ற பெயரில் ஆடை வடிவமைப்பு குறித்து பெண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். மேலும், தன்னிடம் பயிற்சி பெற்றவர்களை கொண்டு உலக சாதனையும் படைத்துள்ளார்.

“சேலம்தான் என்னுடைய சொந்த ஊர். அம்மா, அப்பா, நான், தம்பின்னு அழகான சிறிய குடும்பம். பள்ளிப் படிப்பு முடித்த கையோடு எனக்கு வீட்டில் திருமணம் பேசி முடித்தாங்க. என் மாமனார் வீட்டில் எல்லோருக்கும் விவசாயம்தான் தொழில். மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தனார், என் கணவர் உட்பட எல்லோருமே விவசாயம்தான் பார்த்தாங்க. ஆனால், அனைவரும் பட்டப்படிப்பினை முடித்திருக்கிறார்கள். அதைப் பார்த்து எனக்கும் ஒரு பட்டம் வாங்கணும்னு ஆசை வந்தது. என் பெயருக்கு பின்னால் சுகுணா பி.ஏன்னு போட்டுக் கொள்ள விரும்பினேன். என் மகன் பிறந்தவுடன் என் விருப்பத்தை என் கணவரிடம் கூறினேன். அவரும் சம்மதம் சொன்னார். தொலைதூரக் கல்வியில் பி.காம் முடிச்சேன். தொடர்ந்து கம்ப்யூட்டர் பயிற்சியும் எடுத்தேன்’’ என்றவர், தையல் கலையில் தனக்கு ஆர்வம் ஏற்பட்டது குறித்து விவரித்தார்.

“நான் பி.காம். முடிச்சதும் எங்க வீட்டில் வங்கிக்கான தேர்வு எழுதச் சொன்னாங்க. எனக்கு அதில் விருப்பமில்லை. சொந்தமா ஏதாவது தொழில் செய்ய விரும்பினேன். அதனால் தையல் கற்றுக் கொண்டேன். எங்க ஊரில் ஒரு அக்கா நல்லா தைப்பாங்க. அவர்களிடம் பயிற்சி எடுத்தேன். ஆனால், அவர்களுக்கு பேசிக் தையல்தான் தெரியும். நான் என்னை அப்கிரேட் செய்து கொள்ள விரும்பினேன். அதனால் கோவையில் முறைப்படி ஃபேஷன் டிசைனிங் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படிச்சேன். ஒருமுறை என்னுடைய பயிற்சி பள்ளியில் ஆசிரியர் ஒருவர் வரவில்லை.

அதனால் அன்று நான்தான் பாடம் நடத்தினேன். நான் பயிற்சி அளித்த விதம் எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. அனைவரும் நன்கு புரியும் படி எளிமையாக சொல்லிக் கொடுத்ததாக கூறினார்கள். அப்பதான் எனக்கே தெரிந்தது. எனக்குள் ஆசிரியருக்கான திறமை ஒளிந்திருக்கிறது என்று. படிப்பு முடித்த பிறகு அதையே என்னுடைய தொழிலாக மாற்ற நினைச்சேன். அதனால் ஃபேஷன் டிசைனிங் மட்டுமில்லாமல் ஆரி வேலைப்பாடு, எம்பிராய்டரி என தனிப்பட்ட பயிற்சி மேற்கொண்டேன்.

பிறகு பயிற்சி மையம் ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் சில காலம் வேலை பார்த்தேன். அதன் பிறகு தான் ‘ஃபேஷன் ஆர்ட்’ பயிற்சி மையத்தினை துவங்கினேன். கடந்த நான்கு வருடங்களில் தமிழன் ஐகான் மற்றும் பெஸ்ட் ஃபேஷன் டிசைனிங் பயற்சி மையம் என்ற விருதுகளை என் பயிற்சி மையம் பெற்றுள்ளது’’ என்றவர், பயிற்சி அளிப்பது மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுக்க நடைபெறும் ஃபேஷன் போட்டிகளில் பங்கு பெற்று பரிசும் பெற்றுள்ளார்.

‘‘ஃபேஷன் போட்டிகளில் பங்கு பெறுவது மட்டுமில்லாமல் ஃபேஷன் ஷோக்களுக்கு நான் உடைகளை வடிவமைத்தும் தருகிறேன். 2017ல் தமிழ்நாடு முழுதும் 300-க்கும் மேற்பட்ட டிசைனர்கள் பங்கு பெற்ற ‘டெக்ஸ்வேலி’ போட்டியில் தமிழ்நாட்டின் ‘சிறந்த கிரியேட்டிவ் டிசைனர்’ என்ற பட்டம் பெற்றேன். இதுவரை என்னிடம் 3000த்துக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். அதில் முக்கியமாக விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற மற்றும் ஏழைப் பெண்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறேன். மேலும், அவர்கள் சொந்தமாக தொழில் துவங்கவும் உதவி செய்து வருகிறேன்.

தொடர்ந்து வருடத்திற்கு இரண்டு முறை என் பயிற்சி மையம் சார்பாக நான் ஃபேஷன் ஷோவினை நடத்தி வருகிறேன். என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் டிசைன் செய்த உடைகள் அதில் இடம்பெறும். ஒருமுறை மாற்றுத்திறனாளிகளுக்காகவே பிரத்யேக ஃபேஷன் ஷோ ஒன்றை நிகழ்த்தினேன். நாங்க டிசைன் செய்த உடைகளை அவர்களுக்கு அணிவித்து அழகு பார்த்தது மட்டுமில்லாமல், அவர்களுக்கே அந்த உடையினை இலவசமாக கொடுத்தோம்.

கடந்தாண்டு பயிற்சி மையம் சார்பாக நடைபெற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் என் மாணவர்கள் உருவாக்கிய 300 உடைகளை மூன்று மணி நேரத்திற்குள் மாடல்களுக்கு அணிவித்து மேடையில் காட்சிப் படுத்தி உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்தோம். இதுவரை யாரும் இந்த சாதனையை நிகழ்த்தியதில்லை. என்னுடைய கனவு கொஞ்சம் பெரியது. இந்த வருடங்களில் நான் பல ஆயிரம் ஃபேஷன் டிசைனர்களை உருவாக்கியிருக்கேன். ஃபேஷன் ஒரு கடல். அதில் நாம் எப்போதும் அப்டேட்டில் இருக்க வேண்டும்.

அதனால் தற்போது பெங்களூரில் மேற்படிப்பு படிச்சேன். கோவையில் என்னுடைய பயிற்சி மையத்திற்கு இரண்டு கிளைகள் உள்ளன. அதில் என்னிடம் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறேன். தமிழ்நாடு முழுதும், இந்த துறையில் விருப்பம் உள்ள இல்லத்தரசிகளுக்கு பயிற்சி அளித்து தொழில்முனைவோராக மாற்ற வேண்டும்’’ என்றவர் பெண் தொழில்முனைவோர், யங் அச்சீவர், சாதனைப் பெண்மணி, பெண் சாம்பியன், தென்னிந்திய வுமன் அச்சீவர் போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.

தொகுப்பு: ஷன்மதி

Related Stories: