கோடையில் வற்றல் வடாம் செய்யப்போகிறீர்களா? சில டிப்ஸ்கள் – வாசகர் பகுதி

நன்றி குங்குமம் தோழி

*ஜவ்வரிசி வடாம் முத்து முத்தாக இருக்க வேண்டும் என்றால் ஜவ்வரிசியை ஊற வைக்காமல் தண்ணீருடன் சேர்த்துக் கிளற வேண்டும்.

*ஜவ்வரிசி வடாம் மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் கொஞ்சம் அவலை எடுத்து ஊற வைத்து அதனுடன் கலந்து விட்டால் கெட்டியாகி விடும். சுவையும் அதிகமாகும்.

*வடாமுக்கு மாவு கிளறும் போது உப்பை அதிகமாக சேர்த்தால் எண்ணெயில் பொரிக்கும் போது வடாம் சிவந்து விடும். அதனால் சரியான அளவு சேர்க்க வேண்டும்.

*ஜவ்வரிசி வடாம் சவ்சவ் என வாயில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க ஜவ்வரிசியை வேக வைக்கும் போது சிறிது அரிசி மாவையும் கலந்து வேக வைக்க வேண்டும்.

*வடாம் செய்ய மாவு கூழ் கிளறி ஆறிய பிறகே மாவை வட்டமாக ஊற்ற வேண்டும். சூடாக ஊற்றினால் கட்டி கட்டியாக இருக்கும்.

*வடாம் செய்யும் கூழ் மாவை ஒரு சிறு குழிக் கரண்டியில் எடுத்து துணியில் வட்ட வட்டமாக மாவை ஊற்றினால் வடாம் அழகாக வட்டமாக வரும்.

*வடாம் செய்யும் கூழ் மாவில் கறிவேப்பிலை அரைத்து சேர்த்தால் வடகம் பொரித்தவுடன் கமகமவென மணமாக இருக்கும்.

*வடாம் பிழியும் அச்சின் உட்புறமாக எண்ணெயை தடவி விட்டு பிறகு மாவை ஊற்றி பிழிந்தால் மாவு சுலபமாக வெளியே வந்து விழும்.

*மோர் மிளகாய் வற்றல் போடும் போது வெந்தயத்தை அரைத்து மோரில் கலந்து உப்பு சேர்த்து மிளகாய்களை ஊறப் போட்டால் மணமாக இருக்கும்.

*குழம்பு, கருவடாம் செய்யும்போது கொத்தமல்லித் தழையை அரைத்து சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

*வடாம் மாவு கூழ் கிளறும் போதே கட்டி பெருங்காயத்தை ஊறவைத்து அந்த நீரைக் கலந்தால் வடாம் மணமாக இருப்பதுடன் எளிதில் செரிமானம் ஆகும்.

*வெண்டைக்காய், கொத்தவரங்காய் போன்ற காய்களை நறுக்கி உப்பு கலந்த நீர் மோரில் ஊறவைத்து வெயிலில் காயவைத்தால் சுவையான வற்றல் ரெடி. இதை குழம்பு, சாம்பாரில் எண்ணெயில் பொரித்து போடலாம்.

*மோர் மிளகாய் வற்றலை மோரில் ஊற வைக்காமல் எலுமிச்சம் பழச்சாறில் சிறிது உப்பு சேர்த்து, அதில் பச்சை மிளகாயை ஊறப் போட்டு, வெயிலில் காயவைத்து எண்ணெயில் பொரித்தால் இது ஒரு தனி அலாதி சுவையுடன் வைட்டமின் சி சத்தும் கிடைக்கும்.

*புளித்த தயிரில் வேப்பம் பூவை போட்டு நன்றாக வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொண்டால் வேப்பம் பூ வற்றல் கிடைத்துவிடும்.

*பழைய சாதத்தை அரைத்து வடாம் செய்யும்போது பழைய சாதத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்தால் வடாம் மிகவும் சுவையாக இருக்கும்.

தொகுப்பு: ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

 

Related Stories: