உங்க பிசினஸ் வளர கரை நல்லது!

நன்றி குங்குமம் தோழி

மாடர்ன் உடைகள் பல இருந்தாலும் நம்முடைய பாரம்பரிய உடையான புடவைக்கு என்றைக்குமே பெண்கள் மத்தியில் தனி விருப்பம் உண்டு. கல்யாண புடவை, அம்மாவின் புடவை என ஒவ்வொரு புடவைக்கும் தனிப்பட்ட எமோஷன் இருக்கும். அந்தப் புடவையில் உள்ள பட்டு ஜரி பொலிவினை இழக்க வாய்ப்புள்ளது. அதனை மீண்டும் பொலிவுடன் புதிது போலவும், கரைகளை நீக்கி தருகிறார் திருப்பூரைச் சேர்ந்த அகல்யா. இவர் ‘மான்வா – த சாரி டாக்டர்’ என்ற பெயரில் பட்டுப் புடவைகளுக்கு ேரால் பாலீஷிங் மற்றும் டிரை கிளீனிங் செய்து தருகிறார்.

‘‘என்னுடைய சொந்த ஊர் உடுமலைப்பேட்டை. திருமணமாகி திருப்பூரில் செட்டிலாகிட்டேன். கல்யாணம் முன்பு வரை வேலை பார்த்து வந்தேன். திருமணத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க இல்லத்தரசியாக மாறிவிட்டேன். வேலைக்கு போன போது என் கையில் பணம் இருக்கும். அது ஒரு தன்னம்பிக்கையை கொடுத்தது. திருமணத்திற்குப் பிறகு என் தேவையினை என் கணவர் முழுமையாக பூர்த்தி செய்தாலும், என்னமோ இல்லாதது போன்ற உணர்வு எனக்குள் இருந்தது.

அதனாலேயே ஏதாவது செய்யணும்னு நினைத்தேன். ஆனால், 20 வருட இடைவேளைக்குப் பிறகு அலுவலகம் சென்று வேலை பார்க்க முடியாது. அதனால் கிளாஸ் பெயின்டிங், திரெட் ஜுவல்லரி, டெரக்கோட்டா நகைகள் எல்லாம் கற்றுக் கொண்டு அதை தெரிந்தவர்கள், நண்பர்களுக்கு செய்து கொடுத்தேன். ஆனால், அதில் பெரிய லாபம் பார்க்க முடியவில்லை’’ என்றவர், புடவை பாலீஷிங் துறைக்குள் நுழைந்தது பற்றி விவரித்தார்.

‘‘எனக்கு புடவை கட்ட ரொம்ப பிடிக்கும். கல்லூரியில் புடவை கட்ட வேண்டும் என்பதால், பருத்திப் புடவைகளை கஞ்சி போட்டு கட்டுவேன். ஒருமுறை என்னுடைய பட்டுப் புடவையினை டிரைகிளீனிங் கொடுத்த இடத்தில் சரியாக செய்யவில்லை. வேறு இடத்தில் கொடுத்த போது ரொம்பவே நன்றாக பாலீஷ் செய்து கொடுத்தார்கள். ஆனால், அவர்கள் அது செய்வதை நிறுத்திட்டாங்க. புடவையை யாரிடம் கொடுப்பதுன்னு தெரியல. மற்றவர்களை தேடுவதற்கு பதில் நானே ஏன் செய்யக்கூடாதுன்னு எண்ணம் வந்தது.

அதற்கு முக்கிய காரணம் பெண்கள்தான்.இன்று பெண்கள் விதவிதமா புடவையினை அணிய விரும்புகிறார்கள். சாதாரண பருத்தி உடையினைக்கூட நல்ல விலை கொடுத்து வாங்குகிறார்கள். ஆனால், பட்டு முதல் பருத்திப் புடவைகளை சரியான முறையில் பராமரிப்பதற்கான இடம் அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களுக்காகவே நான் இந்தத் தொழிலை செய்ய விரும்பினேன். புடவையை டிரை கிளீனிங் மற்றும் பாலீஷிங் செய்ய கற்றுக் கொண்டேன். முதலில் நான் செய்த போது பெரிய வித்தியாசத்தை பார்க்க முடியவில்லை. புடவைகள் புதிது போலவும், பாழாகாமல் எவ்வாறு கொடுக்க வேண்டும் என்று ஆய்வு செய்து இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் ஹீட்டர் மற்றும் பாலீஷ் அளவினை மாற்றி அமைத்தேன்.

தொழிலை ஆரம்பித்த போது பழைய காலத்தில் செய்வது போல் கட்டைக் கட்டி புடவையில் உள்ள கரைகளை நீக்கி பாலீஷ் செய்தேன். ஆனால், அந்த முறையில் ஒரு நாளைக்கு ஐந்து புடவைகள்தான் செய்ய முடியும். அதனால் பட்டுப்புடவைகள் மட்டுமே ெசய்து வந்தேன். ஆர்டர்கள் அதிகரித்ததும் என்னால் அந்த முறையினை மட்டுமே பின்பற்ற முடியில்லை. ஒரு முழு லாண்டரி செட்டப்பினை அமைத்தேன். வாஷிங் மெஷின் முதல் புடவையை டிரை கிளீனிங் மற்றும் பாலீஷிங் செய்யும் இயந்திரங்கள் என அனைத்தும் கொண்டு யூனிட் ஒன்றை அமைத்தேன். சொல்லப்போனால் புடவைக்கான பாலீஷிங் மெஷின் முதன் முதலில் திருப்பூருக்கு நான்தான் இறக்குமதி செய்தேன்.

டிரைகிளீனிங் பலரும் செய்வாங்க. ஆனால், நான் அப்படி செய்வதில்லை. காரணம், நான் புடவையின் தன்மைக்கு ஏற்பட அதனை டிரீட் செய்வேன். எல்லா புடவையினையும் நான் ஒரே மாதிரி டிரை கிளீனிங் செய்வதில்லை. மேலும் பட்டுப் புடவைகளை எப்படி கடையில் வாங்கும் ேபாது புதிதாக இருக்குமோ அதே போல் கொடுப்பேன். உடுத்தும் போதும் புதுப் புடவையினை உடுத்துவது போன்ற உணர்வினை தரும். நிறங்களும் மாறாது. பருத்திப் புடவைக்கும் கஞ்சி போட்டு தருகிறேன். சிலர் கஞ்சி போட்டு மொடமொடன்னு கேட்பாங்க.

ஒரு சிலர் கஞ்சி போட்டாலும் உடலில் மென்மையாக இருக்க வேண்டும்னு சொல்வாங்க. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப டிரை கிளீனிங் முறையினை கஸ்டமைஸ் செய்து தருகிறோம். அதாவது, ஒரு புடவையை புதிதாக உடுத்தும் போது ஏற்படும் உணர்வினை அப்படியே மீட்டுத் தருவதுதான் எங்களின் ஸ்பெஷாலிட்டி’’ என்றவர், புடவை பாலீஷிங் இயந்திரங்களையும் அவர்களே தயாரித்து பெண்களுக்கு மட்டுமில்லாமல் புடவை விற்பனையாளர்களுக்கும் விற்பனை செய்து வருகிறார்.

‘‘சில பெண்கள் சொந்தமாக ஒரு யூனிட் ஆரம்பித்து அதனை தொழிலாக செய்ய விரும்பி எங்களை அணுகுவார்கள். அவர்களுக்கு நாங்க இயந்திரத்தை கொடுப்பது மட்டுமில்லாமல் அதனை எவ்வாறு இயக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து, வங்கியில் கடன் பெறுவது முதல் அவர்களுக்கு தொழில் அமைத்து தருவது வரை அனைத்து உதவிகளையும் செய்து தருகிறோம். பிரான்சைசி முறையில் செய்ய விரும்புபவர்களுக்கு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். புடவை விற்பனையாளர்கள் பொறுத்தவரை வாடிக்கையாளர்களுக்காக புடவையை பலமுறை விரித்துக் காண்பிப்பதால், புடவையின் மடிப்பு கலைந்து ெபாலிவிழக்கும். அதனை மீண்டும் பளபளக்க செய்ய இந்த இயந்திரங்களை வாங்குகிறார்கள்.

இயந்திரம் ெபாறுத்தவரை ஒன்றுதான். ஆனால், அதில் புடவைகளின் தன்மைக்கேற்ப அமைப்பினை மாற்ற வேண்டும். அந்த அளவினை சரியாக நியமித்தால் தான் பாலீஷிங்கும் சரியாக வரும். இந்த இயந்திரம் தயாரிக்கும் போது புடவையின் தன்மைக்கேற்ப எவ்வளவு நிர்ணயிக்க வேண்டும் என்று முழுமையாக ஆய்வு செய்த பிறகுதான் இயந்திரத்தை வடிவமைத்ேதாம். புடவை டிரை கிளீனிங் செய்ய பழங்கால முறையினைதான் பின்பற்றுகிறோம். முதலில் புடவையில் கரை எடுப்போம். பிறகு புடவையில் ரசாயனம் தடவி டிரை கிளீனிங் முறையில் நீக்குவோம். பிறகு பாலீஷ் செய்வோம். அதில் சில புடவைகளுக்கு கைகளை கொண்டு பூச வேண்டும். ஒரு சில புடவைகளை இயந்திரத்தில் செலுத்தி ஸ்ப்ரே செய்வோம். புடவையின் தன்மைக்கேற்ப இது மாறுபடும்.

ரோல் பாலீஷ், கட்டையில் புடவையை கட்டி, அதில் பாலீஷ் தடவி, மீண்டும் கட்டையில் சுற்றி வெயிலில் காய வைத்து, பிறகு புடவையினை பிரித்து மடித்து கொடுப்பாங்க. அவ்வாறு புடவையினை காயவைத்து பிரிக்கும் போது புடவைக்கு ஒரு பளபளப்பினை தரும். பட்டுப்புடவையினை தண்ணீரில் துவைக்கக்கூடாதுன்னு சொல்லக் காரணம், சாயம் போகும். மேலும், புடவையில் உள்ள மொடமொடப்பு மற்றும் ஷைனிங் குறைய வாய்ப்புள்ளது. பட்டுப்புடவையை முறையாக பாலீஷ் செய்வதால், அதன் நிறம், பளபளப்பினை மீட்டு புதிது போல் தர முடியும்’’ என்றவர், பாலீஷ் செய்யப்படும் முறையினை விவரித்தார்.

‘‘இயந்திரத்தில் புடவையை செலுத்தி அதன் தன்மைக்கேற்ப பாலீஷ் அளவினை குறிப்பிட்டால் போதும். அது ஸ்ப்ரே செய்யும். பிறகு சூடான ேராலர் மூலம் அழுத்தம் கொடுக்கும் போது ஸ்மூத் பினிஷிங் மற்றும் பளபளப்பினை தரும். இதுவே பழைய முறை என்றால் பாலீஷினை புடவையில் தடவி கட்டையில் சுற்றி வெயிலில் காயவைக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை எந்தப் புடவையாக இருந்தாலும் அதை கட்டி அனுபவிக்க வேண்டும். பலர் கரை பட்டுவிடும் என்று உடுத்தாமல் அப்படியே மடித்து வைத்திருப்பார்கள்.

நாளடைவில் மடிப்புகளில் கிழிய வாய்ப்புள்ளது. ஆனால், நாங்க சுருட்டி மடிப்புகளை அழுத்தாமல் கொடுப்பதால், புடவைகள் புதிது போல அப்படியே இருக்கும். ஒரிஜினல் பட்டு என்றால் ஜரி பொடிப் பொடியாக உதிர்ந்துவிடும். அதனால் முடிந்த வரை புடவையினை கட்டி அனுபவியுங்கள்’’ என்றவர், புடவையை ப்ரீப்ளீட் செய்யும் போது ஸ்டீம் ஐயர்ன் பாக்ஸில் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

‘‘பட்டுப்புடவையினை மஸ்லின் போன்ற மெல்லிய வெள்ளை நிற துணியில் சுற்றி வைக்கலாம். சுற்றி வைக்கும் போது, புடவையில் உள்ள ஈரத்தன்மையை உள்ளிழுத்துக் கொள்ளும். புடவையும் பாழாகாமல் இருக்கும். பட்டு ஜரி கருக்காது. பிளாஸ்டிக் கவரில் வைத்திருந்தால், புடவையில் ஈரத்தன்மை இருந்தால் அது புடவையில் தங்கி பூசனம் பிடிக்கும். ஒருமுறை ஜரி கருத்துவிட்டாலோ சாயம் பிடித்தாலும் அதை சரி செய்யவே முடியாது.

மேலும், ஒரு புடவையை பத்து முறை கட்டியதும் அதன் நிறம் மங்கியது போல் காட்சியளிக்கும். காரணம், சுற்றுச்சூழலில் உள்ள தூசி புடவையில் படிந்து துணியின் நிறம் மங்கும். அதை டிரை கிளீனிங் மற்றும் பாலீஷ் செய்யும் போது புதிது போல் இருக்கும். டிரை கிளீனிங் புடவையில் உள்ள அழுக்கு கரையினை நீக்கும். அதன் பிறகு பாலீஷ் செய்யும் போது புடவை புதிது போல் மாறும்’’ என்றார் அகல்யா.

செய்தி: ஷம்ரிதி

படங்கள்: சதீஷ்

Related Stories: